இரு மடங்கு வேகமாக பரவக்கூடிய புதிய உருமாற்றக் கிருமி

இரு மடங்கு வேகமாக பரவக்கூடிய புதிய உருமாற்றக் கிருமி

1 mins read
11398300-7504-4ca9-aa4b-35f875fc96fd
-
Google News Preferred Icon

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் சி12 வகை கொரோனா கிருமித்தொற்று பல வகையில் உருமாறக்கூடியது என்றும் மற்றதைவிட வேகமாக பரவக்கூடியது என்றும் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சி12 என்றறியப்படும் இந்த வகை கொரோனா கிருமித்தொற்று கடந்த மே மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. மற்ற கொரோனா கிருமி வகைகளைவிட இரண்டு மடங்கு வேகமாகப் பரவக் கூடியது இது என்கிறது தென்னாப்பிரிக்க தொற்றுநோய் கழகம். எனவே கொரோனா தாக்கத்தின் அடுத்த அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

என்றாலும் இது முதலில் கண்டறியப்பட்டதற்குப் பிறகு இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 0.2 விழுக்காடு அளவிற்கு மட்டுமே அதிகரித்துள்ளது.

சீனா, பிரிட்டன், நியூசிலாந்து, மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் சி12 வகை கிருமிப் பரவல் உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கிருமிப் பரவல் தொடங்கிய முதல் அலையின் போது தோன்றிய சி1 என்ற வகை கொரோனாவில் இருந்து மேலும் உருமாற்றம் அடைந்து இந்த புதிய சி12 வகை கொரோனா உருவாகியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, ஐரோப்பாவில் டிசம்பர் மாதத்திற்குள் 236,000 பேர் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, தடுப்பூசி போடும் பணியின் மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அது கூறுகிறது. உலகளவில் கொரோனா தொற்றுக்கு மாண்டோர் எண்ணிக்கை 4.5 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு எச்சரித்துள்ளது.