ஷாங்காய்: நாளொன்றுக்கு ஒரு மணி நேரம்தான். அதுவும் வாரயிறுதி நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே. சீனாவில் 18 வயதுக்கு கீழுள்ள சிறார்கள் இணைய விளையாட்டு விளையாடுவதற்கான புதிய கட்டுப்பாடுகள் இவை.
சிறார்கள் இணைய விளையாட்டுக்கு அடிமையாவது அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீனா இக்கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே சிறார்கள் இணைய விளையாட்டு விளையாட அனுமதிக்கப்
படுவர் என்கிறது சின்ஹுவா. பொது விடுமுறை நாட்களிலும் இதே நேரத்தில் விளையாடலாம்.
எந்த காரணத்தைக் கொண்டும் குறிப்பிடப்பட்ட நேரத்தைவிட சிறார்களைக் கூடுதல் நேரம் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று இணைய விளையாட்டு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாக சீனாவின் இணைய விளையாட்டு சந்தையை மேற்பார்வையிடும் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
மேலும் பயனர்கள் அனைவரும் தங்களது உண்மையான விவரங்களைக் கொடுத்து பதிவு செய்துள்ளனரா என்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
இதற்கு முன்பு 2019 விதிகளின்படி, நாளொன்றுக்கு 1.5 மணி நேரமும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரமும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

