சிங்கப்பூர்: உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் எதேச்சைபாணி நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் வீரர் தோ வீ ஏழாவது இடத்தில் முடித்தார். இப்போட்டியில் இவர் தனது தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
இப்போட்டியை 27.43 விநாடிகளில் முடித்த உக்ரேன் வீரர் தங்கமும் 27.84 விநாடிகளில் முடித்த கொலம்பிய வீரர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
சிங்கப்பூர் வீரரான 22 வயது தோ வீ, இப்போட்டியின் பந்தய தூரத்தை 28.65 விநாடிகளில் முடித்தார். இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா கேம்ஸ் போட்டியில் இந்த தூரத்தை அவர் 29.01 விநாடிகளில் கடந்திருந்தார்.
தோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் எனும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக கலந்துகொண்டுள்ள தோ வீ, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஸ்7 400மீட்டர் எதேச்சைபாணி நீச்சல் போட்டியிலும் 7வது இடத்தைப் பிடித்தார்.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எஸ்7 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியிலும் தோ வீ கலந்துகொள்ளஉள்ளார்.

