கொவிட்-19 நோய்த்தொற்று பரவிவரும் சில ஆசிய நாடுகளில் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் இன்னமும் தடுப்பூசி போட்டிராத நிலையில், பணக்காரர்கள் பலர் 'பூஸ்டர்' தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வரிசையில் முந்தும் நிலை ஏற்படுகிறது.
ஏற்கெனவே தடுப்பூசி பற்றாக்குறையால் அவதியுறும் இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்தப் போக்கு நிலவுகிறது.
இந்தோனீசியாவில் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், தாங்கள் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டது குறித்து அரசியல் தலைவர்கள் சிலர் கலந்துரையாடுவது கேமராவில் பதிவாகியது.
அதிபர் செயலரின் அதிகாரபூர்வ ஒளிவழியில் இந்தக் கலந்துரையாடல் தவறுதலாக ஒளிபரப்பானது. அதில், ஃபைசர் தடுப்பூசிக்காக தாம் காத்துக்கொண்டிருப்பதால் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறுவதை அறிய முடிகிறது.
இதுகுறித்து ஊடகங்களில் கேள்விகளுக்கு திரு விடோடோவின் அலுவலகம் கருத்துரைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அந்தக் காணொளியும் நீக்கப்பட்டது.
தாய்லாந்தில் கர்ப்பிணிகளுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கும் போடப்படவேண்டிய ஃபைசர் தடுப்பூசிகளைத் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவியாளர்களுக்கும் வழங்கியதற்காக இரு மருத்துவமனைகளில் இயக்குநர் மற்றும் மருத்துவர் ஆகிய இருவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் டெல்டா வகை கிருமி, கொவிட்-19 தொற்றை பரப்பிவரும் வேளையில், அதற்கு எதிராக 'பூஸ்டர்' தடுப்பூசிகள் பாதுகாப்பு வழங்குவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஏழை நாடுகளுக்குப் போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைக்கப்படும்வரை 'பூஸ்டர்' தடுப்பூசித் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு வளர்ச்சியடைந்த நாடுகளிடம் உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

