நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலில் போலிசார் அதிரடி நடவடிக்கை
ஆக்லாந்து: நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் உள்ள பேரங்காடியில் நேற்று குறைந்தது ஆறு பேரைக் கத்தியால் குத்திய நபரைப் போலிசார் சுட்டுக் கொன்றனர். அவர்களில் மூன்று பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியவர் இலங்கைக் குடிமகன் என்றும் அவரை நியூசிலாந்து போலிசார் ஐந்து ஆண்டுகளாகக் கண்காணித்து வந்தனர் என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார்.
பெயர் தெரிவிக்கப்படாத அந்த நபர், ஐஎஸ் பயங்கரவாதக் குழுவைப் பார்த்து தூண்டப்பட்டதாகவும் தாக்குதல் தொடங்கிய 60 விநாடி களுக்குள் போலிசார் அவரை சுட்டுக் கொன்றதாகவும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
ஆக்லாந்தின் நியூலின் வட்டாரத்தில் உள்ள பேரங்காடியில் பிற்பகலில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பேரங்காடிக்குச் சென்ற அந்த நபர் அங்கு அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, அருகில் இருந்தவர்களைக் குத்தத் தொடங்கினார் என்று நியூசி லாந்து ஊடகங்கள் கூறின.
அவர் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து போலிசார் அவரைத் பின்தொடர்ந்தனர் என்றும் தாக்குதல் நடந்த நேரத்தில் அவர்கள் அருகே இருந்தனர் என்றும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
அந்தத் தாக்குதலை வெறுக்கத் தக்க செயல் என்று வருணித்த திருவாட்டி ஆர்டன், அதைத் தனி நபர் நடத்தியதாகவும் எந்த சமயமும் நடத்தவில்லை என்றும் கூறினார். அச்செயல்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றார் அவர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கத்திக்குத்துக் காயங்களுடன் பலர் தரையில் கிடந்ததாகக் கூறினர்.
தாக்குதல் பற்றி சமூக ஊடகங் களில் பதிவிடப்பட்ட காணொளிகள், அங்கு பெரும் குழப்பம் நிலவி யதையும் தாக்குதல் தொடங்கியபோது பேரங்காடியிலிருந்து பலர் தப்பி ஓடியதையும் காட்டின. பின்னர் சற்று நேரத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் ஆறுமுறை கேட்டது.
தாக்குதலை நடத்திய இலங்கை நாட்டவர், 2011ஆம் ஆண்டு நியூ சிலாந்துக்குச் சென்றார். 2016ஆம் ஆண்டிலிருந்து அவர் பின்பற்றிய சித்தாந்தத்தால் அவரை போலிசார் நோட்டமிட்டு வந்தனர்.
கடந்த சில மாதங்களாக அவரை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர் என்றும் அவர் பயங்கரவாதக் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் நேற்று வரை தடுத்து வைக்கும் அளவுக்கு அவர் எந்தக் குற்றத்தையும் புரியவில்லை என்று திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார்.
கடந்த 2019 மார்ச் 5ல் கிரைஸ்ட்சர்ச் நகரில் இரண்டு பள்ளிவாசல்களில் ஒருவன் மனம்போனபோக்கில் கண்ணில் பட்டவர்களை சுட்டதால் 51 பேர் கொல்லப்பட்டனர்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நியூசிலாந்து தொடர்ந்து விழிப்பு நிலையில் இருந்து வருகிறது. சந்தேக நபர்கள் கண்காணிக்கப் பட்டு வருகின்றனர்.
கடந்த மே மாதத்திலும் டன்எடினில் உள்ள பேரங்காடியில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்தனர்.

