வெலிங்டன்: நேற்று முன்தினம் நியூசிலாந்து பேரங்காடியில்
பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய ஆடவரைக் கடந்த ஐந்து ஆண்டு களாக அந்நாட்டு அதிகாரிகள் கண்காணித்து வந்ததாக நியூ
சிலாந்துப் பிரதமர் ஜெசின்டா
ஆர்டன் தெரிவித்தார்.
ஆனால் அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை என்றார் அவர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட 32 வயது இலங்கை நாட்டவர் கடந்த ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார்.
மாணவருக்கான விசா மூலம் அவர் நியூசிலாந்துக்கு வந்ததாகவும் பயங்கரவாதத் தாக்குதல்
களுக்கு ஆதரவாக 2016ஆம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதும் அதிகாரிகளின் பார்வை அவர் மீது திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கத்தி, அனுமதிக்கப்படாத பொருள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றத்துக்காக 2018ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
தனி ஆளாக இருந்து தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக அப்போது சந்தேகிக்கப்பட்டது.
தடுப்புக் காவலில் இருந்தபோது அதிகாரிகளைத் தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆனால் நியூசிலாந்தின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
நேற்று முன்தினம் ஆக்லாந்தில் உள்ள பேரங்காடியில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து, அங்கிருந்து ஏழு பேரை அவர் தாக்கினார்.
அவர்களில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்தியவரைக் கண்காணிக்கும் பொறுப்பு வகித்த போலிஸ் அதிகாரிகள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த ஆடவரை நாடு கடத்தாததற்கான காரணத்தை வெளியிட முடியவில்லை என்றார் திருவாட்டி ஆர்டன்.
இந்நிலையில், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மேலும் கடுமையாக்கப்போவதாக திருவாட்டி ஆர்டன் சூளுரைத்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதையும் குற்றமாக்க, மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, நியூசிலாந்தில் உள்ள பேரங்காடிகள் விற்பனைக்காக அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த கத்திகளை அகற்றிவிட்டன.

