'ஆட்டிசம்' குறைபாடு உள்ள மூன்று வயது ஆண் குழந்தையைக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்ற செய்தி, ஆஸ்திரேலியர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மூன்று நாட்கள் கழித்து, ஒரு சிறு ஓடையில் அக்குழந்தை அமர்ந்துகொண்டு சேற்றுநீரை அள்ளிப் பருகியபோது மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்த அதிகாரியின் கண்ணில் பட்டுவிட்டது.
இதையடுத்து, 'ஆட்டிசம்' இருந்த நிலையில், தம் மகன் உயிரோடு மீட்கப்பட்டதைத் தாம் வரமாகக் கருதுவதாக பிள்ளையின் தாயார் கூறினார்.
குழந்தைக்கு ஆங்காங்கே கீறல்களும் சிறு காயங்களுமே ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலையில் குழந்தை காணாமல் போனது குறித்துப் புகார் கிடைத்தபோது போலிசார் ஹெலிகாப்டரைக் கொண்டு சுற்று வட்டாரத்தைத் தேடத் தொடங்கினர்.
குதிரை மீது சவாரி செய்தவாறு மீட்புப் பணியாளர்கள், அதிகாரிகள் சிலரும் குழந்தையைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அடர்ந்த மேடு பள்ளமாக அப்பகுதி இருந்ததால் சிறுவனைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.
"அந்தச் பிஞ்சு ஒரு சிறிய ஓடையில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது," என்று செய்தியாளர்களிடம் கூறினார் நியூ சவுத் வேல்ஸ் போலிஸ் சூப்பரின்டென்டன்ட் பிராட் மங்க்.
போலிஸ் ஹெலிகாப்டரிலிருந்து பதிவான காணொளிப் படங்களில், பாறைகள் நிறைந்த ஓர் ஓடைக்குள் குழந்தை அமர்ந்தபடி தன் கைகளில் தண்ணீரை வாரி முகத்துக்கும் வாய்க்கும் கொண்டு போவதைப் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், குழந்தை காணாமல் போன சம்பவத்தை ஒட்டி விசாரணை மேற்கொண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் போலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

