நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்கு தலில் கொல்லப்பட்ட மேலும் இருவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலின் 20வது ஆண்டு நிறைவு சில நாட்களில் வரும் வேளையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் இருந்த இரட்டைக் கோபுரத்தை அல்காய்தா பயங்கரவாத அமைப்பு கடத்தப்பட்ட விமானங்களை மோதி தகர்த்தது. இதில் 2,753 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த 1,646வது மற்றும் 1,647வது நபர்களின் எச்சங்கள் மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் ஆராயப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.
"எவ்வளவு நாட்கள் ஆனாலும் உலக வர்த்தக நிலையத் தாக்கு தலில் பலியான உங்கள் அன்புக்குரியவர்களின் அடையாளத்தைக் கண்டுபிடிப்போம் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரிடம் உறுதி கூறியிருந்தோம். அதன்படி மேலும் இருவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தப் புனிதமான பணியைத் தொடர்ந்து செய்வோம்," என்று தலைமை மருத்துவ பரிசோதகர் பார்பரா சாம்சன் அறிக்கையில் கூறியிருந்தார்.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 1,106 பேர் அல்லது 40 விழுக்காட்டினர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

