தோக்கியோ: ஜப்பானிய அரசாங்கம், தோக்கியோ மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளில் அவசரகால நிலையை நீட்டிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
தற்போதைய அவசரநிலை இம்மாதம் 12ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதால் மேலும் இரு வாரங்களுக்கு அதாவது இம்மாதம் கடைசி வரை அவசரநிலையை நீட்டிக்க அது திட்டமிடுகிறது.
புதிய உருமாறிய 'டெல்டா' கிருமியின் கட்டுக்கடங்காத ஆட்டத்தால் மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு அவசரநிலையை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசு கூறுகிறது.
தோக்கியோ, ஒசாகா மற்றும் 17 இதர பகுதிகளிலும் அவசரகால நிலையை செப்டம்பர் 30 வரை நீட்டிக்க விரும்புவதாக பொருளியல் அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா நேற்று தெரிவித்தார்.
இதன் தொடர்பில் பிரதமர் யோஷிஹிடே சுகா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
"புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குைறந்து வந்தால் இம்மாத இறுதிக்குள் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தணியும்," என்றார் அவர்.
அவசரநிலை அமலில் இருந்தாலும் தடுப்பூசி சான்றிதழ் உதவியுடன் பொருளியலை படிப்படியாக வழக்க நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று என்எச்கே வெளியிட்ட மற்றோர் அறிக்கையில் அரசு தெரிவித் தது.
சான்றிதழ் பெற்ற உணவகங்கள், மதுபானக்கூடங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அதே சமயத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ள தடையிருக்காது என்று அறிக்கை தெரிவித்தது.

