தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 தினசரி தொற்று 3,200ஐ எட்டுவதை தவிர்க்க மக்கள் செயல்பட வேண்டும்: அமைச்சர்

1 mins read
1a6608d3-60ae-40f3-860e-b43d161e6dda
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து கொவிட்-19 தொற்று எண்ணிக்கை இருமுறை இரட்டிப்பாகியுள்ளது. தற்போதைய கிருமித்தொற்று அலையில் தொற்று எண்ணிக்கை குறைந்து, நிலையாவதற்கு முன் அது மூன்று முறை இரட்டிப்பாகக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி ஏறக்குறைய 100 பேருக்குத் தொற்று பதிவாகியிருந்ததை அவர் சுட்டினார்.

"அப்போது முதல், கிருமித்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது," என்றார் அவர்.

தடுப்பூசி விகிதம் அதிகம் உடைய மற்ற நாடுகளின் அனுபவங்களைப் பார்க்கையில், கொவிட்-19 தொற்று அலை காலத்திற்கும் நீடிப்பதில்லை என்றும் மாறாக, 30 முதல் 40 நாள்களில் உச்சத்தைத் தொட்டபின் எண்ணிக்கை குறைந்து நிலையாகும் என்றார் திரு ஓங்.

எனினும், அத்தகைய காலகட்டத்தில், 10 நாள்களுக்கு ஒருமுறை தினசரி தொற்று இரட்டிப்பாகக்கூடும். அப்படி என்றால் நான்கு, ஐந்து முறை தொற்று இரட்டிப்பாகுவதற்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்றார் திரு ஓங்.

தற்போது சிங்கப்பூரில் தினசரி தொற்று 400லிருந்து 800ஐ எட்டும் நிலையை நெருங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

"அப்படி பார்த்தால், தொற்று இன்னும் இரண்டு முறை இரட்டிப்பாகலாம். அதாவது, 800லிருந்து 1,600 ஆகவும் 1,600லிருந்து 3,200 ஆகவும் அது இரட்டிப்பாகலாம்," என்ற அவர், கிருமித்தொற்று நிலவரம் அத்தகைய நிலையை எட்டுமா என்பது இங்குள்ள அனைவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து உள்ளது என்றார்.