கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்வைத்துள்ள சீர்திருத்தத் திட்டங்களை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார்
இப்ராகிம் வரவேற்றுள்ளார்.
"நாடாளுமன்ற, அரசாங்க நிர்வாகத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நான் வரவேற்கிறேன்.
"கடந்த மாதம் 25ஆம் தேதியன்று நானும் சக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்களும் பிரதமர் இஸ்மாயிலைச் சந்தித்துப் பேசினோம்.
"அதனைத் தொடர்ந்து இப்போது முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கம். இருப்பினும், கொவிட்-19 நெருக்கடிநிலையை முறி
யடிக்கவும் மக்களின் உயிரைக் காக்கவும் பொருளியல் நெருக்கடியிலிருந்து மலேசியர்களைக் காப்பாற்றவும் பொதுவான ஒரு தளத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்கள் தொடர்கின்றன," என்று கெஅடிலான் கட்சித் தலைவரான திரு அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
முக்கியமான சீர்திருத்தத் திட்டங்
களைத் தாம் முன்வைப்பதாகவும் அதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினர் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் திரு இஸ்மாயில் நேற்று முன்தினம்
கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் பதவிக்காலத்துக்குப் பத்து ஆண்டுகள் வரம்பு விதிப்பது, அமைச்சர்களுக்கு இணையாக எதிர்க்கட்சித் தலைவருக்கும் அதே அளவிலான சம்பளம், வளங்கள் ஆகியவற்றை வழங்குவது, நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்களில் 50 விழுக்காட்டினர் ஆளுங்
கட்சியினரையும் 50 விழுக்காட்டினர் எதிர்க்கட்சியினரையும் நியமிப்பது, தேசிய மீட்சி மன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்வது, வாக்காளர்களின் குறைந்தபட்ச வயதை 18ஆகக் குறைப்பது முதலியவை பிரதமர் இஸ்மாயில் தந்துள்ள வாக்குறுதிகளில் அடங்கும்.
திரு இஸ்மாயில் முன்வைத்துள்ள திட்டங்களை வரவேற்றபோதிலும் நாளை நாடாளுமன்றம் கூடும்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும் என்றார் திரு அன்வார்.
திரு இஸ்மாயிலுக்குத் தற்போது நூலிழைப் பெரும்பான்மை மட்டுமே உள்ளது.

