தோக்கியோ: பசிபிக் கடற்பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், ஜப்பானின் தெற்குத் தீவுகள் கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நீர்மூழ்கிக் கப்பல் தென்பட்டதாக ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார். அது சீனாவிற்குச் சொந்தமானதாகக் இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாகவும் அவர் சொன்னார்.
வெள்ளிக்கிழமையன்று, ககோஷிமா மாநிலத்தின் ஒரு பகுதியான அமாமி ஒஷிமா தீவுக்கு அருகில், வடமேற்குப் பகுதியை நோக்கி செல்லும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை அடையாளம் கண்டதாக ஜப்பானிய கடற்படை தெரிவித்தது.
இதற்கிடையே, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி, இந்த ஊடுருவல் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் கண்
காணிப்பைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சந்தேகத்திற்குரிய நீர்மூழ்கிக் கப்பல் யோகோவேட் தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மேற்கு நோக்கிச் சென்றதாகவும் அமைச்சு கூறியது. இதுகுறித்து சீன தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.
தனது நீர்ப் பகுதிகளிலும் அதற்கு அருகில் உள்ள சர்ச்சைக்குரிய நீர்ப் பகுதிகளிலும் சீனக் கப்பல்கள் பலமுறை ஊடுருவியதாக ஜப்பான் சில ஆண்டுகளாக புகார் அளித்து வருகிறது.

