சோல்: வடகொரியா, கடந்த வாரயிறுதியில் நீண்டதொலைவு பாயக்கூடிய புதிய ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரத்துவ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டின் அணு ஆற்றல் உள்ள முதல் ஆயுதமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏவுகணைகளை உத்திபூர்வமாக மிக முக்கியமான ஆயுதங்கள் என்று வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வருணித்தது. இச்சோதனைகளில், அவ்வகை ஏவுகணைகள் சுமார் 1500 கிலோமீட்டர் கடந்து தனது இலக்கை எட்டி, வடகொரியக் கடற்பகுதியில் விழுந்ததாக கேசிஎன்ஏ கூறியது.
வடகொரியாவின் ஆளும் பாட்டாளிக் கட்சியின் அதிகாரத்துவ செய்தித்தாளான ரோடோங் சின்முன் ஏவுகணை பாய்ச்சப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது.
வடகொரியா, ஓர் ஏவுகணைக்கு வெளிப்படையாக உத்திபூர்வ நிலையை அளித்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அந்த ஏவு கணைக்கு அணுவாயுதத்தை ஏந்தும் ஆற்றல் உள்ளதென அர்த்தமாகக் கொள்ளலாம் என்றும் அமெரிக்காவின் அனைத்துலக அமைதிக்கான கார்னகி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அங்கித் பாண்டா கூறினார்.
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை, அதன் அண்டை நாடு களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்று அமெரிக்காவின் இந்தோ பசிபிக் படைக் கட்டுப்பாட்டுத் தளம் கூறியுள்ளது. வடகொரியா அதன் ஆயுதத் திட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும் அது காட்டு வதாக அமெரிக்கா தெரிவித்தது.
ஏவுகணைச் சோதனையைப் பற்றி அமெரிக்காவுடன் சேர்ந்து ஆராய்ந்து வருவதாக தென்கொரியாவும் ஜப்பானும் கூறின.
வடகொரியாவின் அணுவாற்றல், ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டு களாக முடங்கிப் போன நிலையில் இந்த ஏவுகணைச் சோதனை இடம்பெற்றுள்ளது.

