லங்காவி தீவில் சிறப்பு பயண ஏற்பாடு
கோலாலம்பூர்: லங்காவி தீவில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள சிறப்புப் பயண ஏற்பாடு, மலேசியாவின் மற்ற சுற்றுலாத் தலங்கள் திறந்துவிடப்படுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்று அந்நாட்டு சுற்றுலா, கலைகள், கலாசாரத் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறியுள்ளார். அதனால் சுற்றுப் பயணிகளைப் பொறுப்பாக நடந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மலேசியாவில் ஏற்பட்டுள்ள புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 16,073 ஆகக் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 20,711 ஆக இருந்தது. சரவாக் மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டி 3522 ஆக இருந்ததாக மலேசிய சுகாதாரத் துறை விடுத்த அறிக்கை தெரிவித்தது. இரண்டாம் இடத்தில், ஜோகூரில் 2,030 தொற்றுச் சம்பவங்களும் மூன்றாவது நிலையில், சிலாங்கூரில் 1,947 சம்பவங்களும் பதிவாயின.
நியூசிலாந்து: தொடரும் பொதுமுடக்கம்
ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் அடுத்த திங்கட்கிழமை வரை கடும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக்லாந்தில் நேற்று புதிதாக 33 பேருக்குக் கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
ஆக்லாந்தில் தொற்று பெருகி வருவதற்கான சான்று இல்லாதபோதும் புதிய தொற்றுச் சம்பவங்கள் இருக்கும்வரை அபாயம் இருக்கவே செய்கிறது என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் நேற்று கூறினார்.
ஆக்லாந்தில் அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பள்ளிகள், அலுவலகங்கள், பொது இடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
ஹோசிமின்னில் கட்டுப்பாடுகள்
ஹனோய்: கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வியட்னாமின் ஹோசிமின் நகரில் இம்மாத இறுதி வரை கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
தொற்றுக்குழுமங்களைத் தனிமைப்படுத்தி, தடுப்பூசி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த கட்டுப்பாடுகளைத் தொடர்வது அவசியம் என்று ஹோசிமின் நகரத்தின் துணைத்தலைவர் டுவோங் ஆன் டக் கூறினார்.
இதே நேரத்தில் தலைநகர் ஹனோய், தொழில்துறை நகரமான பின் டுவோங் ஆகியவற்றிலும் மெக்கோங் டெல்டா வட்டாரத்தில் உள்ள சில மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை மெல்ல தளர்த்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமானச் சேவைகளை மூன்று கட்டங்களாக மீண்டும் தொடங்குவது பற்றியும் வியட்னாமிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
நான்காவது தடுப்பூசிக்குத் தயாராகி வரும் இஸ்ரேல்
ஜெரூசலம்: இஸ்ரேலிய மக்களுக்கு நான்காவது தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் போதுமான அளவுக்கு தடுப்பூசி இருப்பதற்கு ஆயத்தங்களைச் செய்துவருகிறது. இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் அந்நாட்டு வானொலியில் இதைத் தெரிவித்தார். இஸ்ரேலில் இதுவரை சுமார் 2.8 மில்லியன் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுள்ளது. மூன்றாவது தடுப்பூசியின் ஆற்றல் அதிக காலத்துக்கு நீடிக்கும் என்றும் நான்காவது தடுப்பூசிக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு அதற்கான தேவை இருக்காது என்றும் திரு நாச்மான் ஆஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

