கான்பெரா: அனைத்துலகப் பயணங்களை மீண்டும் தொடங்கும் நோக்கில், ஆஸ்திரேலியா புதிய மின்னிலக்க பயண அட்டை முறையை அறிவித்துள்ளது. அந்த மின்னிலக்க அட்டையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் இணைக்கப்படும்.
உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த முறை பொருந்தும். தற்போதைய பயண அட்டை களுக்கும் கொவிட்-19 பயண உறுதிமொழி அட்டைக்கும் பதிலாக அது செயல்படும்.
ஒருவர் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் வரையிலான கிருமித்தொற்று, தடுப்பூசி தொடர்பான தகவல்களை அதில் பதிவிடலாம்.
இவ்வாண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையங்களில் இம்முறை நடப்புக்கு வரும். மின்னிலக்க பயண அட்டையில் உள்ள தகவல்கள் வட்டார அளவிலான அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, 12 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு நேற்று தடுப்பூசிகளைப் போட தொடங்கியது. சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.
கிருமித்தொற்றல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 80% பேருக்குத் தடுப்பூசி போடும் இலக்கை எட்டினாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்குக் கட்டுப் பாடுகள் தொடரலாம் என்று மாநில அரசாங்கம் எச்சரித்தது. அந்த மாநிலத்தில் புதிதாக 1527 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

