ஜோகூர்: சிங்கப்பூருடனான எல்லையைத் திறக்கும் முயற்சியில் ஜோகூருக்கு கூடுதல் பங்கு இருக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் ஹாஸ்னி முகமது விடுத்த கோரிக்கைக்கு அங்குள்ள அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜோகூரும் சிங்கப்பூரும் எவ்வாறு பொருளியல் மற்றும் சமூக அளவில் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதை அந்த மாநிலத்தின் தலைவர்களுக்கு கூடுதலாகப் புரியும் என்று ஜோகூரின் சீன வர்த்தகத் தொழில் சபைத் தலைவர் லாவ் குவெக் ஷின் கூறினார்.
ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையைத் திறக்கும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த மலேசிய பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் ஜோகூரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதை திரு லாவ் சுட்டினார். இப்போது அரசாங்கமும் அமைச்சரவையும் மாறிவிட்டதால், மாநிலத் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தையில் கூடுதல் பங்கு இருப்பது முக்கியம் என்று திரு லாவ் கூறினார்.
எல்லைத் திறப்பில் கவனம் செலுத்தும் மாநிலக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மலேசிய-சிங்கப்பூர் ஊழியர்கள் பணிக்குழுத் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன் கூறினார்.
சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும் அக்குழு கவனிக்க வேண்டும் என்றும் அத்தகைய மலேசியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அமைப்புகள் இக்குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

