இந்தியா: தடுப்பூசி போட்டு நான்கு மாதங்களுக்குள் குறைந்த நோயெதிர்ப்பாற்றல்

இந்தியா: தடுப்பூசி போட்டு நான்கு மாதங்களுக்குள் குறைந்த நோயெதிர்ப்பாற்றல்

1 mins read
06a4ccf0-3ac8-40da-8cf2-d8a5a200329a
படம்: ஏஎஃப்பி -

புவனேஸ்வர்: முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டு நான்கு மாதங்களுக்குள் 'ஆன்டிபாடி' எனப்படும் நோயெதிர்ப்புப்பொருள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துபோனது இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 614 சுகாதாரப் பணியாளர்களிடம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, மேலை நாடுகளைப்போல 'பூஸ்டர்' தடுப்பூசி போடலாமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய அரசாங்கத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவலாம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், நோயெதிர்ப்புப்பொருளின் அளவு குறைந்துபோவதால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கெதிரான நோயெதிர்ப்பாற்றலை இழந்துவிட்டதாகக் கருதக்கூடாது என்று ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் உள்ள வட்டார மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் சங்கமித்ரா பதி கூறினார்.

உடலிலுள்ள நினைவணுக்கள் அத்தொற்றுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை வழங்கலாம் என்றும் அவர் சொன்னார்.

ஃபைசர்/பயோஎன்டெக், ஆஸ்ட்ராஸெனக்கா ஆகிய தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொண்ட ஆறு மாதங்களுக்குள் கொரோனா தொற்றுக்கெதிரான நோயெதிர்ப்பாற்றல் குறையத் தொடங்குவதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.