கோலாலம்பூர்: நாடாளுமன்றத்துக்குச் செல்லும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது அலுவலர்களும் நாடாளுமன்ற அமர்வின்போது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் புதன்கிழமையிலும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கொவிட்-19 கிருமி பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதால் மலேசிய நாடாளுமன்ற நாயகர் அஸார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.
பரிசோதனை செய்துகொள்வதற்கு 20 நிமிடங்கள் எடுக்கும் என்று அவர் கூறினார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்குள் வருவதைத் தவிர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய சுகாதார அமைச்சின் குழு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். நாடாளுமன்றத்தில் இருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகக்கவசத்தையும் முகக்காப்பையும் அணிய வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகின்றனர்.

