கொவிட்-19 தடுப்பூசிகளை விரைவில் மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி இந்தியா பரிசீலித்து வருகிறது.
பெரியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தடுப்பூசியாவது போட்டுவிட்ட நிலையில், தடுப்பூசி விநியோகம் அதிகரித்துள்ளதால் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக இந்த விவகாரத்தைப் பற்றி அறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உலகிலேயே தடுப்பூசிகளைத் தயாரிக்கும் ஆகப்பெரிய நாடான இந்தியா, இவ்வாண்டு ஏப்ரலில் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது. உள்நாட்டில் தொற்றுப் பரவல் அதிகரித்ததால் தனது சொந்த மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தத் தொடங்கியது.
ஆண்டிறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட 944 மில்லியன் பேருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, அவர்களில் 61 விழுக்காட்டினருக்குக் குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

