சிட்னி: கொரோனா கிருமி பாதிப்பு அதிகம் காணப்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை சிட்னி அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர். கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை நிலையாகி வருவதுடன் தடுப்பூசி விகிதமும் அதிகரித்துள்ள நிலையில், இத்தளர்வு அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரான சிட்னி, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக முடக்கநிலையில் இருந்தது.
முன்னதாக, கிருமி அதிகம் பரவியிருந்த பகுதிகளில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதையடுத்து, நேற்றுமுதல் அது தளர்த்தப்படுவதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிளாடிஸ் பெரிஜக்கிலியான் அறிவித்தார்.
நீண்டகால முடக்கநிலை ஒரு முடிவுக்கு வருவதற்கான தொடக்கம் இது என்று சிட்னிவாசிகள் இத்தளர்வைக் கருதுகின்றனர்.
இதற்கிடையே, தொற்று விகிதம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 1,300ல் உள்ளது. அத்துடன் சிட்னி மக்களில் 80 விழுக்காட்டினருக்கு ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டுவிட்டது.
கடந்த சில நாட்களாக ஒரு நிலைத்தன்மையை தொற்று எண்ணிக்கையில் பார்க்க முடிவதாகக் கூறிய மாநில முதல்வர் பெரிஜக்கிலியான், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வீட்டில் தங்கும் உத்தரவை மீறாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெரும்பாலான சிட்னிவாசிகள் உணவு வாங்கவும் வெளிப்புற உடற்பயிற்சி செய்யவும் மருத்துவ சிகிச்சை நாடவும் மட்டுமே தங்களின் இல்லங்களை விட்டு வெளியேற முடியும். பள்ளிகள், மதுக்கூடங்கள், உணவகங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஜூன் முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், தங்களின் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யவும் சிட்னிவாசிகளுக்கு அனுமதி இல்லை.
இதற்கிடையே விக்டோரியா மாநிலத்தில் பதிவாகிய புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை, இரண்டாவது நாளாக நேற்று குறைந்திருந்தது. முதல் தடுப்பூசியை விக்டோரியா மக்கள் போட்டுக்கொண்டுள்ள விகிதம் 68% ஆகும். உருமாறிய டெல்டா கிருமி பரவி வந்ததால் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மாநிலம் தளர்த்தவுள்ளது.
விக்டோரியாவில் தடுப்பூசிக்குத் தகுதிபெற்றுள்ள பெரியவர்களில் குறைந்தது 70 விழுக்காட்டினர் தங்களின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை விக்டோரியா கூடிய விரைவில் அடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

