ஸ்ட்ராஸ்பர்க்: கொவிட்-19க்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசிப் பணி, துரிதமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் 'தடுப்பூசி போடாததால் ஏற்படும் நெருக்கடி' நிலையைத் தவிர்க்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி எர்சிலா வொன் டெர் லெயென் கூறியுள்ளார்.
கொவிட்-19 கொள்ளைநோய், அதிவேகப் பொருளியல் வீழ்ச்சி, 'பிரெக்சிட்' தந்த அழுத்தங்கள் போன்ற வெவ்வேறு விவகாரங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கும் நாடுகளின் மீள்திறன், கடந்த பல மாதங்களாக சோதனைக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், 27 நாடுகளை உள்ளடக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில், கொவிட்-19 தடுப்பூசிக்குத் தகுதிபெற்ற பெரியவர்கள் 70 விழுக்காட்டினருக்கு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
மேலும், 19 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவற்றின் கொள்ளைநோய்க்கு முந்தைய பொருளியலை இவ்வாண்டு மீண்டும் பெறும் என்று அவர் தெரிவித்தார்.

