பெட்டாலிங் ஜெயா: வெளிநாட்டில் மலேசிய தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படும் என்று கோலாலம்பூர் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பாகக் கருதப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மலேசிய அரசாங்கம் திங்கட்கிழமையன்று உயர் நீதிமன்றத்தில் அதன் மேல்முறையீட்டைச் சமர்ப்பித்தது.
இதையடுத்து, சிவில் சமூக அமைப்புகள் அரசாங்கத்தின் செயல்பாட்டை சாடி வருகின்றன.
மேல்முறையீட்டை அரசாங்கம் மீட்டுக்கொள்ளுமாறு தொடங்கப்பட்ட மனுவில் ஒரே நாளில் 10,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில், மலேசிய தாய்மார்களின் நிலையைத் தாம் அறிந்திருப்பதாகவும் இந்த விவகாரம் குறித்துச் சட்டசபையில் பேசவிருப்பதாகவும் சட்ட அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாஃபர் கூறியுள்ளார்.
தந்தை மலேசியராக இருந்து, அவருக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால், அதற்குத் தானாகவே மலேசிய குடியுரிமை வழங்கப்படும்.

