ஃபுளோரிடா: முதல் விண்வெளி சுற்றுலா பயணிகள் நால்வருடன் புறப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக பூமியின் நீள்வட்ட பாதைக்குள் நுழைந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், இன்ஸ்பிரேஷன்-4 என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், விண்வெளி வீரராகப் பயிற்சி பெறாத சாதாரணமானவர்களை முதல்முறையாக விண்வெளிக்குச் சுற்றுலா அனுப்பியுள்ளது. இவர் களுடன் விண்வெளி வீரர்கள் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 8.00 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. அடுத்த 12 நிமிடங்களில் விண்கலம் தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக பூமியின் நீள்வட்டப்பாதைக்குள் நுழைந்தது. பூமியிலிருந்து 575 கி.மீ. உயரத்தில் இந்த விண்கலம் மூன்று நாட்களுக்குச் சுற்றி வரும்.
இதற்குப் பிறகு அட்லாண்டிக் கடலில் ஃபால்கன் ராக்கெட் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலாவில் ஷிப்ட் 4 பேமண்ட் நிறுவனத்தின் நிறுவனரான 38 வயது ஜார்ட் ஐசக்மேன், 29 வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரரான 42 வயதான கிறிஸ் செம்ப்ரோஸ்கி, 51 வயது பேராசிரியர் சியான் ப்ராக்டர் ஆகிய நால்வரும் சென்றுள்ளனர்.

