சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நாளை கொவிட்-19 முடக்கநிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக்கூடும் என்பதால், பொதுப் போக்குவரத்தை நிறுத்தவும் ஆயிரக்கணக்கான போலிஸ்காரர்களைப் பணியில் ஈடுபடுத்தவும் விக்டோரியா மாநில அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
சனிக்கிழமையன்று காலை எட்டு மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கும் என்றும் சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும் என்றும் விக்டோரியா மாநில போலிஸ் துறை தெரிவித்துள்ளது. இவற்றை மீறுவோருக்கு 5,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலேயே ஆக அதிகமாக மெல்பர்ன் நகர மக்கள் ஆறாவது முறையாக முடக்கநிலையை எதிர்கொண்டுள்ளனர். கிருமித்தொற்றின் மூன்றாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வர போராடும் மெல்பர்னில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

