'ஏஆர்டி' பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதியானால் நீங்கள் செய்ய வேண்டியவை

'ஏஆர்டி' பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதியானால் நீங்கள் செய்ய வேண்டியவை

2 mins read
1d37fa41-1512-4fb3-bb9a-a8498b6cb965
ஏஆர்டி பரிசோதனைக் கருவி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆன்டிஜன் விரைவு சுயபரிசோதனை (ஏஆர்டி) கருவியில் கொவிட்-19 தொற்று உறுதியாகும் அதேவேளையில், ஒருவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றால் 72 மணி நேரத்திற்கு வீட்டில் அவர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் தமக்கு உடல்நலம் சரியில்லை என்றால், அவர் உடனே பொது மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளும் இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கினார் சிங்கப்பூர் மருத்துவச் சேவைகள் பிரிவின் இயக்குநர் கென்னத் மாக்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே வீட்டில் வசிப்பவர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், சமூகத்தினர் ஆகிய பலதரப்பினரை கிருமி தொற்றுவதிலிருந்து பாதுகாக்க முடியும் என்றார் அவர்.

கொவிட்-19 சுயபரிசோதனையில் உங்களுக்குத் தொற்று உறுதியாகும் பட்சத்தில், உங்களிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றால் கீழ்காணும் நடைமுறையைப் பின்பற்றவும்:

1. வேலைக்குச் செல்வதையும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதையும் நிறுத்தவும்.

2. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டாம்.

ஏஆர்டி பரிசோதனை முடிவில் உங்களுக்கு கவலை ஏற்பட்டால் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அங்குள்ள மருத்துவர் உங்களது உடல்நிலையை மதிப்பிடச் செய்யலாம்.

3. குறைந்தது 72 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்கவும். அதன் பிறகு மீண்டும் ஏஆர்டி பரிசோதனையைச் செய்துகொள்ளவும்.

நீங்கள் பாதுகாப்பாக குணமடையவும் இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு கிருமி பரவுவதைத் தடுக்கவும் இந்த நடைமுறை உதவும்.

"உங்களது இரண்டாவது ஏஆர்டி பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரிய வந்தால், தொற்றிலிருந்து நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள் என்ற மன நிம்மதி கிடைக்கும்," என்று பேராசிரியர் மாக் விவரித்தார். வேலைக்குத் திரும்புவது, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற வழக்கமான நடவடிக்கைகளில் நீங்கள் படிப்படியாக தொடரலாம் என்றார் அவர்.

4. உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது உடல்நலம் சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்லவும்.

கொவிட்-19 எச்சில்/சளி மாதிரி பரிசோதனை தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அவர் அறிவுறுத்துவார்.

குறிப்புச் சொற்கள்