காபூல்: ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் அந்நாட்டு ஆண் ஆசிரியர்களையும் ஆண் மாணவர்களையும் உயர்நிலைப் பள்ளிகளுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டு உள்ளனர்.
இதன்வழி 13 முதல் 18 வயது வரையிலான பெண்களுக்கு உயர்நிலைக் கல்வியில் இடமில்லை என்று அவர்கள் கோடிகாட்டி உள்ளனர். அங்கு நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தங்கள் எதிர்காலம் இருண்டுவிட்டது என்று உயர்நிலைப் பள்ளி செல்லும் பெண்கள் சிலர் கூறினர்.
1990களில் நடந்த தலிபான் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கோ வேலைக்கோ போக அனுமதிக்கப் படவில்லை. ஆப்கானிஸ்தானைக் கடந்த மாதம் மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், இந்த முறை அவர் களின் ஆட்சியில் சில தளர்வுகள் இருக்கும் என்று உறுதிகூறியிருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி பற்றி ஆழ்ந்த கவலை கொள்வதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேருக்குக் காயம் ஏற்பட்டது. நங்கர்ஹார் மாநிலத்தின் மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் ஏஎப்பி நிறுவனத்திடம் இதைத் தெரிவித்தார்.
தலிபான்களின் வாகனங்கள் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

