கியூபா தயாரித்த தடுப்பூசிக்கு வியட்னாம் அனுமதி வழங்கியது
ஹனோய்: கியூபா தயாரித்துள்ள அப்டலா தடுப்புமருந்தை கொவிட்-19 கிருமிக்கு எதிராக பயன்படுத்த வியட்னாம் அனுமதி வழங்கியுள்ளது. வியட்னாமிய அதிபர் நுவான் சுவான் புக், அதிகாரபூர்வ பயணமாக கியூபா தலைநகர் ஹவானாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணிநேரத்தில் தடுப்பூசி பற்றி அறிவிக்கப்பட்டது. வியட்னாமில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டாவது தடுப்பூசி இது.
வியட்னாமில் தற்போது கொரோனா கிருமிப் பரவல் அதிகமாக உள்ளபோதும், ெதன்கிழக்காசியாவிலேயே மிகக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் அதுவும் ஒன்று. அந்நாட்டில் உள்ள 98 மில்லியன் பேரில் சுமார் 6.3% பேருக்குத்தான் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
லாவோஸ் குகைவாழ் வவ்வால்களுக்கும் கொவிட்-19 கிருமிக்கும் தொடர்பு
வியன்டியேன்: லாவோசின் வடக்குப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில் வாழும் வவ்வால்களுக்கு சிலவித கொரோனா கிருமிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள சில அம்சங்களுக்கு கொவிட்-19 நோய்க்குக் காரணமான சார்ஸ்-கொவி 2 கிருமியுடன் ஒற்றுமை உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரெஞ்சு, லாவோஸ் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சார்ஸ்-கொவி 2 கிருமி போன்ற வேறு வகை கொரோனா கிருமிகள் இயற்கைச்சூழலில், குறிப்பாக வவ்வால்களிடம் அந்தக் கிருமிகள் உள்ளன.
கொவிட்-19 நோய் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற கருத்தை இந்த ஆய்வு ஆதரிக்கிறது.
முடக்கத்தால் பிள்ளைகளின் கண்பார்வை மோசமாகி இருக்கலாம்
குவாங்சோ: கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கத்தால் சிறு பிள்ளைகளின் கண்பார்வை மோசமாகி இருக்கலாம் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. 'ஜாமா' கண் மருத்துவ ஆய்வுச் சஞ்சிகை அந்த ஆய்வை வெளியிட்டது.
சீனாவின் சன் யாட் சென் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பள்ளி ஆய்வை நடத்தியது. சீனாவின் குவாங்சோ மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் 2018லிருந்து சென்ற ஆண்டு வரை மாணவர்களுக்கு செய்யப்பட்ட கண் பரிசோதனைகளின் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
கடந்த 2019இல் இரண்டாம் வகுப்பில் படித்த பிள்ளைகளில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களின் கண்பார்வை ஓராண்டில் மங்கியது. ஒப்புநோக்க, 2018இல் கண்பரிசோதனை செய்த பிள்ளைகளில் 13% பேருக்குத் தான் கண்பார்வை மங்கியது. ஆனால் ஒன்பது, பத்து வயதுப் பிள்ளைகளின் கண்பார்வையில் பொதுமுடக்கத்தால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று ஆய்வு கூறியது.
முதிய அமெரிக்கர்களுக்கு
'பூஸ்டர்' தடுப்பூசி போட ஆதரவு
வாஷிங்டன்: அமெரிக்காவின் உணவு மருந்து நிர்வாகத் துறையின் ஆலோசகர்கள், கொவிட்-19 கிருமிக்கு எதிரான 65 வயது தாண்டிய அமெரிக்கர்களுக்கும் கடும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களும் 'பூஸ்டர்' தடுப்பூசிகளைப் போடுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சுகாதாரப்பராமரிப்புத் துறையினர், ஆசிரியர்கள் போன்ற கிருமி பரவும் அபாயம் அதிகமுள்ள துறைகளில் பணி செய்வோருக்கும் அந்தக் கூடுதல் தடுப்பூசி போடப்படவேண்டும் என்று அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். முன்னதாக, மூன்றாவது ஃபைசர் தடுப்பூசியை 16 வயதைத் தாண்டிய எல்லோருக்கும் போடும் திட்டத்துக்கு எதிராக ஆலோசகர்கள் வாக்களித்தனர்.
அமெரிக்கர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டம் பற்றி அமெரிக்க உணவு மருந்து நிர்வாகத் துறை விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசகர்களின் பரிந்துரைகளின்படி தான் நடக்கவேண்டும் என்ற கட்டாயம் அதற்கு இல்லை. ஆனால் அவர்களின் ஆலோசனை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
மருத்துவமனை சிகிச்சைக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு தரும் மொடர்னா
வாஷிங்டன்: கிருமி தொற்றியவர்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதிலிருந்து ஃபைசர் தடுப்பூசி தரும் பாதுகாப்பு சில மாதங்களுக்குப் பிறகு குறைவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு காட்டுகிறது.
ஆனால் மொடர்னா தடுப்பூசி தரும் பாதுகாப்பு குறையாமல் அப்படியே உள்ளதாகக் கூறப்பட்டது. அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையங்கள் மற்ற ஆய்வாளர்களுடன் சேர்ந்து, 18 மாநிலங்களில் உள்ள 21 மருத்துவமனைகளின் தரவுகள் ஆய்வில் ஆராயப்பட்டன.
முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்ட நான்கு மாதத்துக்குப் பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிராக மொடர்னா தடுப்பூசி, 92% பாதுகாப்பு அளித்ததாகவும் ஃபைசர் தடுப்பூசி 77% பாதுகாப்பு அளித்ததாகவும் ஆய்வு தெரிவித்தது.

