மாஸ்கோ: ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாகச் சுட்டதில் எட்டுப் பேர் பலியாயினர்; பலர் காயமுற்றனர்.
தலைநகர் மாஸ்கோவிற்குக் கிழக்கே, 1,300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்ம் நகரில் இருக்கும் பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பின்னர் அம்மாணவர் கொல்லப்பட்டுவிட்டதாகப் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அவரது சடலம் வெளியே கிடந்ததைப் படங்கள் காட்டின.
துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பலர் இரண்டாம் தளத்தில் இருந்து சன்னல் வழியாகக் குதித்து ஓடியதையும் துப்பாக்கிக்காரன் தங்களது வகுப்பறைக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க நாற்காலிகளால் தடுப்புகளை அமைத்ததையும் ஊடகங்களில் வெளியான காணொளிகள் காட்டின.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த 18 வயது மாணவர், முன்னதாக துப்பாக்கி, தலைக்கவசம், வெடிபொருள் ஆகியவற்றுடன் சமூக ஊடகத்தில் ஒரு பதிவை இட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல், சமயம் சார்ந்த காரணங்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

