கொவிட்-19 செய்திக்கொத்து

கொவிட்-19 செய்திக்கொத்து

2 mins read
332c3a6c-d3f5-4792-bc20-b476ba1ce7bc
-

லாவோஸ் தலைநகரம் முடக்கம்

வியென்டியன்: லாவோஸ் அதன் தலைநகரமான வியென்டியனில் பொதுமுடக்கத்தை அறிவித்து, கிருமித்தொற்று உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களைத் தடை செய்துள்ளது.

சென்ற ஏப்ரல் மாதத்திலிருந்து லாவோசில் கிருமிப்பரவல் பெருகி வருகிறது. கடந்த சனிக்கிழமை அங்கு புதிதாக 467 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாக அரசாங்கம் கூறியது. அவற்றில் பெரும்பாலானவை வியென்டியனில் நிகழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து வியென்டியனில் இரண்டு வாரங்களுக்குக் கடும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. தலைநகரத்துக்குச் செல்பவர்கள் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கிருமித்தொற்று அதிகமுள்ள மற்ற ஏழு மாநிலங்களுக்கு இடையில் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

சிட்னியில் கட்டுப்பாடுகள் தளர்வு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று புதிய தொற்றுச் சம்பவங்கள் கடந்த மூன்று வாரத்தில் முதன்முறையாகக் குறைந்துள்ளன. அத்துடன் மாநிலத் தலைநகர் சிட்னியில் நேற்று சில கிருமிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

நியூ சவுத் வேல்சில் புதிதாக 935 பேருக்குக் கிருமி தொற்றியதாக அதன் முதல் அமைச்சர் கிளேடிஸ் பெரெஜிக்லியன் கூறினார். ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு கிருமித்தொற்று குறைந்தது இதுவே முதல் முறை.

இது நம்பிக்கை அளித்தபோதும், வரும் நாட்களில் மரண எண்ணிக்கை அதிகமாகும் என்றும் அக்டோபர் மாதம் மருத்துவமனைகளுக்குச் சவாலாக இருக்கும் என்றார் திருவாட்டி பெரெஜிக்லியன்.

சிட்னியில் நேற்று மக்கள் வெளியில் சென்று உடற்பயற்சி செய்வதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் சேர்ந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆக்லாந்தில் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் ஒரு மாதமாக நடப்பில் உள்ள பொதுமுடக்கம் இன்னும் குறைந்தது இரண்டு வாரத்துக்கு நீடிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியுள்ளார்.

இருப்பினும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அவர் நேற்று தெரிவித்தார்.

ஆக்லாந்தில் நேற்றுவரை கிருமித்தொற்று நடவடிக்கை ஆக உயர்வான நான்காம் நிலையில் நடப்பில் இருந்தது. இன்று மாலை அது மூன்றாம் நிலைக்கு குறைக்கப்படும். பொதுமக்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்றபோதும், உணவுவிநியோகம் போன்ற சில வர்த்தகங்கள் செயல்படும்.

ஆக்லாந்தில் பரவலான, கண்டறியமுடியாத கிருமித் தொற்று இல்லை என்று கூறப்பட்டதால், தளர்வுகளை அறிவித்ததாக திருவாட்டி ஆர்டன் கூறினார்.

பிலிப்பீன்ஸ்: அக்டோபரில் தொற்று உச்சத்தைத் தொடலாம்

மணிலா: பிலிப்பீன்சில் கொவிட்-19 நோய்தொற்று அடுத்த மாதம் உச்சத்தைத் தொடலாம் என்று அந்நாட்டு சுகாதாரத் துணை அமைச்சர் மரியா ரொசாரியோ வெர்கேரே கூறியுள்ளார். ஆனால் கிருமி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தினால், அதனைத் தடுக்கலாம் என்றார் அவர். பிலிப்பீன்சில் நேற்றுமுன்தினம் 19,721 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியது.

இந்நிலையில், அந்நாட்டில் 120 பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்தும் முன்னோடித் திட்டத்துக்கு அதிபர் டுட்டர்டே அனுமதி தந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று குறைவான இடங்களில் பள்ளிகள் திறக்கப்படும்.