மான்டரீல்: கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் பிரதமர் பதவியை மூன்றாவது முறையாக ஜஸ்டின் டுரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ட்ரூடோவின் லிபரல் கட்சி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் டுரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன.
குவிபெக் மாநிலத்தில் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்ட ஜஸ்டின் டுரூடோ வெற்றி பெற்றார்.
பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கடந்த முறையைப் போன்று சிறிய கட்சிகளின் ஆதரவுடன் டுரூடோ பிரதமராவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும்.
2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரான ஜஸ்டின் டுரூடோ, கடந்த 6 ஆண்டுகளில் சந்திக்கும் 3வது பொதுத் தேர்தலாகும் இது.
பிரதமர் டுரூடோவின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்குள் முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் முடிவு செய்தார்.

