செய்திக்கொத்து

2 mins read
082ea6d4-feda-4279-b959-3f445b730162
-

பதவி விலகிய ரசாலி ஹம்சா

புத்ராஜெயா: மலேசியாவின் மூத்த அரசியல்வாதியும் கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ ஆலோசனை மன்றத்திலிருந்து பதவி விலகியுள்ளார்.

இதை திரு ரசாலி ஹம்சாவின் உதவியாளர் உறுதி செய்துள்ளார். அம்னோ கட்சியின் தலைவரான திரு அகமது ஸாஹிட் ஹமிடியிடம் திரு ரசாலி ஹம்சா தமது பதவி விலகல் கடிதத்தை இம்மாதம் 20ஆம் தேதி சமர்ப்பித்ததாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

மலேசியாவின் தற்போதைய அரசியல் சூழல் தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக திரு ரசாலி ஹம்சா தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில் பெர்சத்து கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு மதிப்பு கொடுக்காமல் தற்போது பெர்சத்து கட்சியுடன் அம்னோ கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகிறது.

"புதிய அமைச்சரவைக்குப் பதிலாக தோல்வியடைந்துள்ள, செயல்பட இயலாத அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இதற்கு அம்னோவின் தலைமையும் ஆதரவு தெரிவித்துள்ளது.

"பெரும்பாலான பதவிகளில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், அடித்தள அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்," என்று திரு ரசாலி ஹம்சா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் பொதுமக்களின் ஆதரவை தற்போதைய அமைச்சரவையால் திரட்ட முடியுமா என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

மலேசியாவில் மேலும்

14,990 பேருக்கு கொவிட்-19

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 14,990 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,142,924ஆக அதிகரித்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அம்மாநிலத்தில் 2,414 பேருக்கு நேற்று பாதிப்பு ஏற்பட்டது.

ஜோகூரில் நேற்று 1,880 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

இந்தோனீசியாவுக்குப் புதிய ஆயுதப்படைத் தலைவர்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய ஆயுதப்படைத் தலைவரை அடுத்த மாதத்துக்குள் அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ நியமினம் செய்ய இருக்கிறார்.

தற்போதைய ஆயுதப்படைத் தலைவரான 57 வயது ஹாடி ஜாஜாந்தோ ஒய்வுபெறுவதாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்தது. ஆயுதப்படைத் தலைவராக 2017ஆம் ஆண்டில் திரு ஜாஜாந்தோ பதவியேற்றார்.

புதிய ஆயுதப்படைத் தலைவராக கடற்படைத் தலைவர் அட்மிரல் யூடோ மார்கோனோ பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.