ஹாங்காங்: இதற்குமேல் சிறிய வீட்டை எவராலும் கட்ட முடியாது எனும் அளவிற்கு ஹாங்காங்கில் குட்டி குட்டி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இரண்டு 'மீப்பெரு (king size)' படுக்கைகளை மட்டுமே போடலாம் என்ற அளவிற்கு 'மீச்சிறு (Nano)' வீடுகள் கட்டப்படுகின்றன.
ஹாங்காங்கின் சாய் கங் பகுதியில் 'நியூ டெரிடரிஸ்' என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 5,400 வீடுகள் அமைகின்றன. அவற்றில் இரண்டு வீடுகளின் பரப்பளவு 8.2 சதுர மீட்டர் மட்டுமே; இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் 12.1 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவை.
பெரும்பாலான வீடுகளின் பரப்பளவு 26.3 சதுர மீட்டர் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் நெருக்கடியான வாழ்விடமும் அதிகரித்துவரும் வீடமைப்புச் செலவுகளும் அண்மைக்காலமாக கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதனையடுத்து, இவ்வாண்டில் மக்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் வீடுகளைக் கட்டுமாறு ஹாங்காங் அரசாங்கத்தைச் சீன உயரதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், வீட்டு விலை என்னவோ விண்ணைத் தொடும் அளவிலேயே உள்ளது. இதையடுத்து, 24 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவு கொண்ட இத்தகைய 'நேனோ' வீடுகளை மக்கள் அதிகளவில் நாடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2010 முதல் 2019 வரை, மொத்தம் 8,500 அடுக்குமாடி 'நேனோ' வீடுகள் அங்கு விற்பனைக்கு விடப்பட்டன. அவற்றில், 85% வீடுகளில் தனியாகப் படுக்கையறை இல்லை; 70% வீடுகளின் குளியலறைகளில் சன்னல் இல்லை. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமே 'திறந்த சமையலறை'தான்!

