கொரோனாவை ஒழிப்பேன் என்றவரை கொரோனாவே கொன்றது

கொரோனாவை ஒழிப்பேன் என்றவரை கொரோனாவே கொன்றது

2 mins read
2cb1c4b7-f535-4a2b-9502-5db82ba28ff9
புத்த துறவிகள் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டபின் திரு எலியந்தவின் உடல் எரியூட்டப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

சச்சின் டெண்டுல்கர், மகிந்த ராஜபக்சேவிற்குச் சிகிச்சை அளித்தவர்

கொழும்பு: தாம் 'ஆசிர்வதித்த' நீரைக் கொண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் கொவிட்-19 பரவலை ஒழிப்பேன் எனக் கூறிய பிரபல இலங்கை மூலிகை மருத்துவர், கொரோனா தொற்றாலேயே நேற்று முன்தினம் இறந்துபோனார்.

எலியந்த ஒயிட், 48, என்ற அவர், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர்க்குச் சிகிச்சை அளித்தவர்.

தாம் ஆசிர்வதித்த நீரை ஆறுகளில் ஊற்றுவதன் மூலம் இலங்கையிலும் இந்தியாவிலும் கொரோனா தொற்றை முடிவிற்குக் கொண்டுவர முடியும் என்று கடந்த ஆண்டு நவம்பரில் திரு எலியந்த கூறியிருந்தார்.

அதற்கு இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியரச்சியும் ஒப்புதல் அளித்திருந்தார்.

ஆனால், அதற்கு இரு மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரு எலியந்த, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து திருவாட்டி பவித்ர நீக்கப்பட்டார். ஆயினும், அவர் அமைச்சரவையில் நீடிக்கிறார்.

2010ஆம் ஆண்டு முழங்கால் காயத்திற்குச் சிகிச்சை அளித்ததற்காக சச்சின், திரு எலியந்தவிற்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருந்தார். அவரது சிகிச்சை, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலில் இரட்டைச் சதமடிக்க தமக்கு உதவியது என்று சச்சின் அப்போது கூறியிருந்தார்.

அதனையடுத்து, திரு எலியந்தமீது அனைத்துலக அளவில் புகழ் வெளிச்சம் விழத் தொடங்கியது.

2010ஆம் ஆண்டு 'ஏஎஃப்பி' செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போது, 12வது வயதில் இருந்து தமக்கு 'அசாதாரண ஆற்றல்' இருப்பதாக திரு எலியந்த கூறியிருந்தார்.

அதன்பின் கௌதம் காம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர் சிகிச்சை அளித்தார்.

கொரோனா தடுப்பூசி போட அவர் மறுத்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் கூறினர். அவரது உடல் கொழும்பு பொதுச் சுடுகாட்டில் நேற்று எரியூட்டப்பட்டது.

பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தனிப்பட்ட மருத்துவ ஆலோசகராக அவர் அறியப்பட்டார்.

இந்நிலையில், "திரு எலியந்தவின் சிகிச்சையால் பல்வேறு நோய்களில் இருந்தும் குணமடைந்தோர் மூலம் அவரது மரபு தொடர்ந்து வாழும்," என்று மகிந்த ராஜபக்சே தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், திரு எலியந்த ஒரு 'மோசடிப் பேர்வழி' என்று மருத்துவர்கள் கூறிவந்தனர். அதேபோல, 3,000 ஆண்டு பழமையான இந்திய மருத்துவ மரபு முறைகளைத் தாம் கையாண்டு வருவதாக திரு எலியந்த கூறிவந்த நிலையில், ஆயுர்வேத மருத்துவர்களும் அதனை ஏற்க மறுத்தனர்.

குறிப்புச் சொற்கள்