கொவிட்-19 தொற்றுடன் வாழத் திட்டமிடும் தென்கொரியா
சோல்: தென்கொரியாவில் கடந்த ஜூலை மாத முற்பகுதியில் தொடங்கிய கொவிட்-19 தொற்று அலை இன்னும் அடங்கியபாடில்லை.
இதற்குமுன் இல்லாத வகையில் அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,434 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கொரிய நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்தது.
ஆயினும், கொரோனா தொற்றியோரில் இறப்பு விகிதம் 0.82% என மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
இவ்வாரம் மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் கிருமிப் பரவல் நடவடிக்கைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் கிம் பூ கியும் வலியுறுத்தியுள்ளார்.
விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்புவோர், கொரோனா தொற்றுக்கான இலேசான அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்றாட பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, அடுத்த வாரத்தில் உச்சத்தை எட்டலாம் என்று சுகாதாரப் பராமரிப்புக் கொள்கைக்கான துணை அமைச்சர் லீ கீ இல் குறிப்பிட்டார்.
இதனிடையே, கொவிட்-19 தொற்றுடன் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வது எப்படி என்பது தொடர்பில் அரசாங்கம் திட்டம் வகுத்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் பெரியவர்களில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்.
இருப்பினும், தொடக்க கட்டத்தில் முகக்கவசம் அணியும் நடைமுறை நீடித்திருக்கும்.
தென்கொரியாவில் இதுவரை 295,132 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அவர்களில் 2,434 பேர் இறந்துவிட்டனர்.
மொத்தம் 52 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட தென்கொரியாவில் நேற்று முன்தின நிலவரப்படி 72.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர்; கிட்டத்தட்ட 44 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்.

