செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
11c01da5-fa34-4322-8d21-d6170eb0e408
-

தைவான் முயற்சியால் ஆத்திரம்; போர் விமானங்களைப் பறக்கவிட்ட சீனா

தைவான்: வட்டார வர்த்தகப் பங்காளித்துவத்தில் இணைய தைவான் முயன்று வருவதால் ஆத்திரமடைந்துள்ள சீனா, தைவானுக்கு அருகே நேற்று முன்தினம் போர் விமானங்களைப் பறக்கவிட்டது. தைவானின் வான்வெளித் தற்காப்பு அடையாள மண்டலத்திற்குள் சீன ராணுவத்தின் 24 போர் விமானங்கள் பறந்ததாகத் தைவான் தற்காப்பு அமைச்சு அறிக்கை கூறுகிறது. 11 நாடுகள் அடங்கிய டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவத்தில் தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தைவான் கடந்த புதனன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் உதவியாளர்களிடம் விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் புகுந்து, வன்முறையில் ஈடுபட்டனர். அதன் தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி டிரம்ப்பின் உதவியாளர்களான மார்க் மீடோஸ், ஸ்டீவ் பேனன் ஆகிய இருவர்க்கும் விசாரணைக் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

போர் முடிவு: வடகொரியா வரவேற்பு

பியோங்யாங்: தங்கள் நாட்டிற்கு எதிரான கொள்கைகளைக் கைவிட்டால் தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான போர் முடிவிற்கு வந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இவ்வாரம் அறைகூவல் விடுத்திருந்தார். அதை 'முதிரா முடிவு' எனக் குறிப்பிட்டு, வடகொரிய மூத்த அமைச்சர் ஒருவர் முதலில் நிராகரித்த நிலையில், அதனை 'மெச்சத்தக்க யோசனை' என்று திருவாட்டி கிம் வரவேற்றுள்ளார்.

ஸ்பானிய பிரிவினைவாதி கைது

ரோம்: ஸ்பானிய பிரிவினைவாதத் தலைவர் கார்லஸ் புய்க்டமோன்ட் இத்தாலியில் கைது செய்யப்பட்டார். ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியாவைப் பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி, அதன் தொடர்பில் 2017ல் தன்னிச்சையாக பொது வாக்கெடுப்பை நடத்திய அவர், அதன்பின்னர் பெல்ஜியத்திற்குத் தப்பியோடிவிட்டார்.