செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a1964181-117f-45f7-9963-38345bc5fdb1
-

பிலிப்பீன்ஸ்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் கட்டுப்பாடுகள் இல்லை

மணிலா: பிலிப்பீன்சில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குக் கட்டுப்பாடுகளை அகற்றும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். அதை வைத்திருப்போர் மட்டுமே உணவகங்கள், சிகை அலங்காரக் கடைகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்குள் நுழையமுடியும்.

பிலிப்பீன்சின் சுமார் 109 மில்லியன் மக்களில் 20 விழுக்காட்டினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை 80 விழுக்காட்டிற்கு உயர்த்துவது அந்நாட்டு அரசாங்கத்தின் இலக்கு.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மாறுபட்ட விதிமுறைகள் இருப்பதன் தொடர்பில் மனித உரிமை ஆணையத்திற்குக் கேள்விகள் வந்த வண்ணம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தைவானை வரவேற்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: பசிபிக் வட்டார வர்த்தக ஒப்பந்தத்தில் சேர தைவானுக்கு இருக்கக்கூடிய தகுதியை அமெரிக்கா பாராட்டியுள்ளது. தைவானுக்குச் சொந்தமான ஆகாயவெளிப் படைப் பகுதியில் சீனா ஊடுருவியதை அமெரிக்கா கண்டித்தும் பேசியது.

ராணுவ, அரசதந்திர, பொருளியல் ஆகியவை ரீதியாக தைவானை நெருக்குவதை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்கா பெய்ஜிங்கிடம் சொன்னது. அதற்குப் பதிலாக தைவானுடன் ஆக்ககரமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்கா பெய்ஜிங்கிடம் சொன்னது.

பசிபிக் வட்டார வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற சீனாவும் விண்ணப்பித்துள்ளது. அதில் சேர தைவான் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. பசிபிக் வட்டார வர்த்தக ஒப்பந்தம், இதற்கு முன் இருந்த பசிபிக் வட்டார பங்காளித்துவத்தின் அடுத்த கட்டம். அந்தப் பங்காளித்துவத்தை அமெரிக்கா ஆரம்பித்தது. ஆனால் 2017ஆம் ஆண்டில், அந்நாட்டு அதிபராக இருந்த டோனல்ட் டிரம்ப் அதிலிருந்து விலகிக்கொண்டார்.

நிலக்கரியில் இயங்கும் ஆலைகள் கட்டுவதை நிறுத்தவுள்ளது இலங்கை

கொழும்பு: நிலக்கரியில் இயங்கும் ஆலைகளைக் கட்டுவதை இலங்கை நிறுத்தவுள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்துவது அந்நாட்டின் இலக்கு என்று அதன் அதிபர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக எரிசக்தி மாநாட்டில் அவர் பேசினார்.

2030ஆம் ஆண்டுக்குள் தான் பயன்படுத்தும் எரிசக்தியில் 70 விழுக்காட்டைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளின் வாயிலாகப் பெற இலங்கை எண்ணம் கொண்டுள்ளது.

இலங்கை, சிலி, டென்மார்க், ஃபிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, மொன்டெனெக்ரோ உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்கள் இனி நிலக்கரியில் இயங்கும் ஆலைகளைக் கட்டாமல் இருப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளதாக பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'சஸ்டெய்னபல் எனர்ஜி ஃபோர் ஆல்' குழு தெரிவித்தது.

போலி தடுப்பூசி ஆவணங்கள் குறித்து மலேசிய போலிஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. உணவகங்கள், சிகை அலங்காரக் கடைகள் போன்றவற்றிற்குள் நுழைய ஒருவர் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கவேண்டும். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் லங்காவிக்கு சுற்றுப் பயணமும் மேற்கொள்ளலாம்.

இவ்வேளையில் போலி தடுப்பூசி ஆவணங்கள் உருவாக்கப்படுவது குறித்து மலேசிய போலிசார் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி போடும் நிலையங்களில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலே ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் போன்ற செயலிகளில் போலி தடுப்பூசி ஆவணங்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவை 65லிருந்து 485 வெள்ளிக்கு விலைபோவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி மலேசியாவில் 59.2 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதைத் தாண்டியோரில் சுமார் 20 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை அல்லது போட்டுக்கொள்ள மறுத்துள்ளனர்.