வாஷிங்டன்: வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய அல்லது இணைந்து வேலை செய்யும் ஊழியர்கள் வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதிக்குள் கட்டாயமாக கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தும்.
வருங்காலத்தில் இத்தகைய ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனை அவர்களின் வேலை ஒப்பந்தங்களில் சேர்க்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று அரசாங்கத்துடன் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயப்படுத்தும் ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெயெழுத்திட்டார்.
இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு அதன் தொடர்பில் அதிகாரபூர்வமான வழிமுறைகளை வெள்ளை மாளிகை அறிவிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காத்துக்கொண்டிருந்தன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்காவின் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அடங்கும். அந்நிறுவனம் அரசாங்க ஊழியர்களுக்கு பயணச் சேவைகளை வழங்கி வந்துள்ளது.

