செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
48fd4610-5cb5-4447-8af1-4aad0821f731
-

தனிமை உத்தரவை வித்தியாசமாக

முடித்துக்கொண்ட ரஷ்ய அதிபர்

மாஸ்கோ: கொவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (படம்), தம்மைத் தாமே இம்மாத இடையில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரின் பரிவாரங்களிடையே பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, அவர் இம்முடிவை எடுத்தார். தனிமைக் காலம் முடிவடைந்ததை அடுத்து பல நாட்களாக சைபீரியாவில் உல்லாசமாக மீன்பிடிப்பதும் மலையேறுவதுமாகத் தம் பொழுதைக் கழித்தார் அவர்.

ஆற்றில் நிற்பது, மீன் பிடிப்பது, பசுமையான புல்வெளியில் நடப்பது, விடுமுறைக்கு எப்போதுமே தமக்குத் துணையாக வரும் தற்காப்பு அமைச்சர் செர்கெ ஷொய்குவுடன் உரையாடுவது என 20 புகைப்படங்களை 'கிரம்ளின்' நாளிதழ் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் 'ஸ்பட்னிக் வீ'யின் இரு தடுப்பூசிகளையும் 68 வயது திரு புட்டின் போட்டு முடித்துவிட்டார்.

ஊழியர் நெருக்கடியைச் சமாளிக்க பிரிட்டனின் தற்காலிக விசா திட்டம்

லண்டன்: ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக பிரிட்டன் 10,500 வரையிலான தற்காலிக வேலை விசாக்களை லாரி ஓட்டுநர்களுக்கும் கோழி வளர்ப்பு ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளது. வெளிநாட்டு ஊழியரணியை நம்பியிருக்கும் நிலை ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம், பிரெக்ஸிட்டுக்குப் பிந்திய குடிநுழைவு விதிகளைக் கடுமையாக்கியது. ஆனால் இத்தற்காலிக விசா திட்டம் அம்முடிவுக்கு மாறானதாக உள்ளது.

அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் இறுதிவரை இந்தக் குறுகிய கால விசாக்கள் நீடிக்கும். கிட்டத்தட்ட 100,000 கனரக சரக்கு வாகன ஓட்டுநர்களுக்குப் பல மாதங்களாக பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே அந்நாட்டு கல்வி அமைச்சும் பங்காளி அமைப்புகளும் இணைந்து, இக்குறிப்பிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு 4,000 பேரை தயார்ப்படுத்தவுள்ளன. இதற்காக பவுன்கள் மில்லியன் கணக்கில் செலவிடப்படும் என்று கூறப்பட்டது.

புருணையில் புதிய உச்சம்

பண்டார் ஸ்ரீ பகவான்: மேலும் 326 பேருக்கு புருணையில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இது புதிய உச்சம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், கொவிட்-19 தொடர்பில் இரண்டு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. 45 மற்றும் 86 வயதுகளுடைய அவ்விருவரும், கொவிட்-19 தொற்று ஏற்பட்ட பிறகு, நுரையீரல் பிரச்சினைக்கு ஆளாகியதாக கூறப்பட்டது.