கொவிட்-19 காரணமாக தனித்திருந்தாலும் பாசம் குறையாத குடும்பத்தினர்

கொவிட்-19 காரணமாக தனித்திருந்தாலும் பாசம் குறையாத குடும்பத்தினர்

3 mins read
dddd5591-de1e-48a1-985f-1a79073360c4
Ms Sharina Mohd Sharif (top middle panel, with her son Tengku Raeesh Ammar Mohd Yusof) and her family during a video call.PHOTO: SHARINAH MOHD SHARIF குடும்பத்துடன் இடம்பெற்ற காணொளி அழைப்பின்போது தம் மகன் ரயீஷ் அம்மார் முகம்மது யூசோஃபுடன் திருமதி ஷரினா முகம்மது ஷரிஃப் (மேல்வரிசை, நடுவில்). படம்: ஷரினா முகம்மது ஷரிஃப் -

திருமதி ஷரினா முகம்மது ஷரிஃப், 47, எதற்குப் பயந்தாரோ அது நடந்துவிட்டது.

அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது. அவரது மூன்றரை வயது மகன், பெற்றோர், ஆக இளைய சகோதரர் ஆகியோரே அந்த நால்வர்.

திருமதி ஷரினாவும் அவரது மகன் ரயீஷ் அம்மார் முகம்மது யூசோஃபும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவரது தந்தை திரு முகம்மது ஷரிஃப் இமாம் கான் சாஹிப், 75, டான் டோக் செங் மருத்துவமனையிலும் தாயார் திருவாட்டி ஃபாத்திமா பீவி அப்துல் கதீர், 68, சாங்கி பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருமதி ஷரினாவின் சகோதர் திரு முகம்மது ஃபைசல் கான் முகம்மது ஷரிப், 45, உபி அவென்யூ 1ல் உள்ள தமது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவர்களது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணும் அதே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 17ஆம் தேதி திருவாட்டி ஃபாத்திமாவுக்கு சளியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மூன்று நாள்கள் கழித்து, பொது மருத்துவரிடம் சென்ற அவரது கணவர் திரு ஷரிஃப் அங்கு 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொண்டார். அவருக்குச் சளி, இருமல் இருந்தது.

அடுத்த நாள் திரு ஷரிஃபுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அதையடுத்து, திருமதி ஷரினா, திருவாட்டி ஃபாத்திமா, திரு ஃபைசல், அவர்களது பணிப்பெண் ஆகியோர் வீட்டில் 'ஏஆர்டி' விரைவுப் பரிசோதனையைச் செய்துகொண்டனர்.

அதில் திருவாட்டி ஃபாத்திமாவுக்கும் திரு ஃபைசலுக்கும் தொற்று உறுதியானது. திருமதி ஷரினாவுக்கும் பணிப்பெண்ணுக்கும் 'தொற்று இல்லை' எனத் தெரியவந்தது.

பின்னர் திருமதி ஷரினாவுக்குக் காய்ச்சலும் தொண்டைவலியும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொது மருத்துவரிடம் சென்றார். அங்கு அவருக்கு 'பிசிஆர்' பரிசோதனை நடத்தப்பட்டது.

அடுத்த நாள் அவரது மகனுக்கும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கேகே மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் சென்றார். அப்போது தமக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக திருமதி ஷரினாவுக்கு செய்தி கிடைத்தது.கேகே மருத்துவமனையில் உள்ள தனியறையில் அவரும் அவரது மகனும் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே, திருவாட்டி ஃபாத்திமாவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கு மருத்துவக் குழு ஒன்றின் வருகைக்காக காத்திருந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கேகே மருத்துவமனையில் இருந்த திருமதி ஷரினா, அவசர மருத்துவ வாகனத்தை அழைத்தார். பின்னர் அவரது தாயார் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இரு நாள்கள் கழித்து திரு ஷரிஃபுக்கும் மூச்சுத்திணறலும் காய்ச்சலும் ஏற்பட்டதைத் தொடரந்து அவரது குடும்பத்தார் மறுபடியும் அவசர மருத்துவ வாகனத்தை அழைக்க நேரிட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

தம் தாயாரையும் மகனையும் தவிர்த்து, திருமதி ஷரினாவின் குடும்பத்தில் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தம் தந்தைக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்த சில நாள்களில் குடும்பத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருமதி ஷரினா கூறினார்.

"என் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வந்தவுடன், என் தாயார் சேர்க்கப்பட்ட அதே மருத்துவமனையில் தந்தையையும் சேர்க்க என் உடன்பிறப்புகள் முயற்சி செய்தனர். ஆனால், மருத்துவப் பராமரிப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால் அது சாத்தியப்படாது என்று மருத்துவ உதவியாளர்கள் கூறிவிட்டனர்," என்றார் திருமதி ஷரினா.

தம் அன்புக்குரியவர்களின் உடல்நிலை சீராக இருந்தாலும் திரு ஃபைசல் பற்றி திருமதி ஷரினா கவலையுறுகிறார். திரு ஃபைசலின் இதயத்தில் ஓட்டை இருப்பது பற்றி முன்பு தெரியவந்தது. அவருக்கு அவ்வப்போது மயக்கமும் ஏற்படும்.

தற்போது அடுத்த 'பிசிஆர்' பரிசோதனைக்காக குடும்ப உறுப்பினர்கள் காத்திருப்பதாக திருமதி ஷரினா குறிப்பிட்டார்.

தமது குடும்பத்திற்கு திருமதி ஷரினாவின் மற்ற உடன்பிறப்புகளும் உறுதுணையாக இருந்தனர். அவரது தம்பி திரு உமர் முகம்மது ஷரிஃப், 46, மருத்துவமனைகளுக்கும் வீட்டிற்கும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய உதவினார்.

மூத்த சகோதரி திருமதி ஷரிஃபா முகம்மது ஷரிஃப், 50, பெற்றோர் அனுமதிக்கப்பட்டுள்ள இரு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டு அதில் கிடைக்கும் தகவல்களை உடன்பிறப்புகளுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துகிறார்.

தினந்தோறும் காலை 11 மணிக்கு காணொளி அழைப்பில் குடும்பம் ஒன்றுகூடி விடுகிறது. ஒருவருக்கொருவர் ஆதரவு நல்க அது நல்ல தளமாக விளங்குகிறது.

"காணொளி அழைப்புகள்தான் எனக்குப் பெரிய உந்துசக்தி. என் பெற்றோரும் சகோதரரும் நலமாக இருப்பது எனக்கு நிம்மதி தருகிறது. கொவிட்-19ஐ நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டு குணமடைந்து, மீண்டும் ஒருவரையொருவர் சந்திக்க விரும்புகிறோம்," என்றார் திருமதி ஷரினா.