கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்பில் இருந்த அவசர நிலையை ஜப்பான் அகற்றவுள்ளது. இது, தற்போதைய பிரதமர் யோஷிஹிடே சுகா தனது பதவிக் காலத்தில் எடுக்கும் கடைசி நடவடிக்கைகளில் ஒன்று.
ஜப்பானில் புதிதாகக் கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்ற மாதம் 20ஆம் தேதியன்று 25,868 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. நேற்று 1,723 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
அவசர நிலை அகற்றப்பட்ட பிறகும் கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படமாட்டா. அவை படிப்படியாக விலக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 சூழலைச் சரியாகக் கையாளவில்லை எனச் சிலர் திரு சுகாவை விமர்சித்தாலும் அடுத்த பிரதமருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வைத்துள்ளார் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

