மெல்பர்னின் கொவிட்-19 சம்பவங்கள் எண்ணிக்கை புதிய உச்சம்
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று பதிவான கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை, புதிய உச்சத்தைத் தொட்டது. விக்டோரியாவின் தலைநகரான மெல்பர்ன், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கடுமையான முடக்கநிலையில் உள்ளது. கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு முன் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று புதிய உச்சத்தில் 1,438 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலிய காற்பந்து இறுதிப் போட்டி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதைப் பார்ப்பதற்காகவே பல வீடுகளில் ஒன்றுகூடல்கள் நடந்தன. இத்தகைய ஒன்றுகூடல்களில் பங்கேற்றவர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட புதிய எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 33 விழுக்காட்டினர் என்று விக்டோரிய அதிகாரிகள் கணித்துள்ளனர்.
"கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பல, முற்றிலும் தவிர்த்திருக்கக்கூடியவை. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இவ்வளவு விரைவாக கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை எப்படி உயர்ந்திருக்கக்கூடும் என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு விளக்கம் அளிக்கவே முயல்கிறேன்," என்று செய்தியாளர் கூட்டத்தில் மாநிலத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
புதன்கிழமையன்று பதிவான 950 தொற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் நேற்று 50% அதிகமான சம்பவங்கள் பதிவாகின. கொள்ளைநோய் சூழலைச் சமாளித்து வருவதற்கிடையே, இந்த எண்ணிக்கை 'பெரும் பின்னடைவு' என்று அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, மாநிலத்தின் 5.5 மில்லியன் பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பெரியவர்களில் 16 வயதுக்கு மேற்பட்ட பாதிப் பேருக்குத் தங்களின் முதல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. தேசிய அளவில் சராசரியாக உள்ள 53 விழுக்காட்டுக்குக் குறைவான விகிதமாக இது உள்ளது.
கொவிட்-19 கிருமியைத் துடைத்தொழிக்கும் உத்திமுறையைக் கைவிட்டுவிட்டு, முடக்கநிலையிலிருந்து மீள்வதற்கு அதிக தடுப்பூசி விகிதத்தைத் தன் உத்திமுறையாக ஆஸ்திரேலியா எடுத்துக்கொண்டுள்ளது. நேற்று நியூ சவுத் வேல்ஸில் புதிதாக 941 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. ஆஸ்திரேலியாவில் நேற்று 11 உயிரிழப்புகளும் உறுதிசெய்யப்பட்டன.

