செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5459e786-5754-4b62-8c2d-87d460b159f8
-

நேப்பாளத்திடம் சிற்பம் ஒப்படைக்கப்படும்

நியூயார்க்: 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தை நேப்பாளத்திடம் ஒப்படைக்க உள்ளதாக அமெரிக்காவின் மெட்ரோபாலிட்டன் கலை அரும்பொருளகம் நேற்று முன்தினம் அறிவித்தது. இரண்டு சீடர்களுடன் கைலாய மலை மேல் சிவபெருமான் நிற்பதைக் காட்டும் சிற்பம், காட்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள கோவில் சன்னிதி ஒன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்குமுன், அதன் தொகுப்பில் இருந்த உமா மகேஸ்வர உருவங்கொண்ட 12ஆம் நூற்றாண்டு நடுகல், 10ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் ஆகியவற்றை அரும்பொருளகம் நேப்பாளத்திடம் திரும்பத் தந்துள்ளது. தற்போது அதன் தொகுப்பில் 200க்கும் மேற்பட்ட நேப்பாளப் பொருட்கள் உள்ளன.

படம்: NYTIMES

வெனிசுவேலாவில் 76.6% ஏழைகள்

கரகாஸ்: வெனிசுவேலாவில் 76.6 விழுக்காட்டினர் கடும் ஏழ்மையில் வாழ்வதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் 28 மில்லியன் மக்களில் கடும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள், 67.7 விழுக்காட்டினர். கொவிட்-19 கொள்ளைநோய், நீடித்த எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் இவ்வாண்டு இந்த அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை அகற்றும் ஹோ சி மின்

ஹனோய்: கொவிட்-19 கட்டுப்பாடுகளை வியட்னாமின் வர்த்தக மையமாக விளங்கும் ஹோ சி மின் நகர், நேற்று முதல் படிப்படியாக அகற்றத் தொடங்கியது. தொற்றால் உயிரிழப்பு விகிதம் பன்மடங்காகியதை அடுத்து நான்கு மாதங்களாக கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. இனி, ஹோ சி மின் நகரில் மேலும் அதிகமான வர்த்தக, சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.