சோல்: அமெரிக்காவுக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், புதிதாக ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். தொடர்புநிலை மீண்டும் பழையபடி கொண்டுவரலாம் என்று தென்கொரியாவுக்கும் ஒரு சலுகையை அவர் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தற்காப்புப் படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் நோக்கில் புதிய 'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை ஒன்றைச் சோதனைசெய்ததாக பியோங்யாங் தெரிவித்ததை அடுத்து, திரு கிம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தமது அணுவாயுத ஆற்றலை அதிகப்படுத்துவதாக நாடாளுமன்றக் கூட்டத்தின் இரண்டாவது நாள் உரையில் அவர் குறிப்பிட்டதுடன் அனைத்துலகச் சமூகத்திற்கு, 'அடிப்படை ஆபத்து' அளிக்கவல்லதாக அமெரிக்கா உள்ளது என்றும் திரு கிம் தெரிவித்தார். அமெரிக்காவின் தென்கொரியக் கொள்கை, மேலும் தந்திரம் மிக்கதாக மாறி வருவதாக அவர் கூறினார். இதனால் தனது புதிய ஆயுத உருவாக்கத் திட்டங்களை முடுக்கிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

