பெய்ஜிங்: கொவிட்-19 கொள்ளைநோய் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், அந்நோய்க்கு எதிராக சீனா உருவாக்கிய தடுப்பூசிகள் பெரிதும் நாடப்பட்டது.
இருப்பினும், உருமாறிய டெல்டா கிருமிக்கு எதிரான செயல்திறன், சீனாவின் தடுப்பூசிகளுக்கு உள்ளது குறித்து அக்கறைகள் நிலவிவர, நாடுகள் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய பக்கம் தடுப்பூசிக்காக திரும்பியுள்ளன.
சீனாவின் தடுப்பூசிகளுக்கு இருந்த மதிப்பு சரிந்துள்ளதை அந்நாட்டு ஏற்றுமதித் தரவுகளில் காண முடிந்தது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆனால் இவ்வாண்டு ஜூலையில் பதிவான 2.48 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.38பி.) ஏற்றுமதி மதிப்பு, 21% சரிந்து ஆகஸ்ட் மாதத்தில் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.67 பி.) மதிப்பில் பதிவாகியது.
"ஆரம்பக் கட்டத்தில் கிடைத்ததை மக்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால் மருத்துவ நிபுணர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் நாளடைவில் தடுப்பூசிகளுக்கு இடையே இருந்த வேறுபாடுகளை அறிந்துகொள்ளத் தொடங்கினர்.
"பாதுகாப்பு என்ற அடிப்படையில் அனைத்து தடுப்பூசிகளும் சமம் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர்," என்று ஹாங்காங் நகர் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் நிக்கலஸ் தோமஸ் கூறினார்.

