புடாபெஸ்ட்: ஹங்கேரியில் கொரோனா தொற்றின் நான்காவது அலை தொடங்கியதில் இருந்து, சென்ற வார இறுதியில் தான் ஆக அதிகமான தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த விவரம் அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் புதிதாக 1,492 புதிய தொற்றுப் பாதிப்பும் 31 தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன.
இவற்றுடன் சேர்த்து அங்கு இதுவரை 824,876 பேரை கொரோனா தொற்றியுள்ளது. 30,230 பேர் தொற்றுப்பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.
இருப்பினும் கடந்த இரண்டாவது, மூன்றாவது தொற்று அலைகளின் போது ஏற்பட்ட உச்ச பாதிப்பு அளவைக் காட்டிலும் இது குறைவு.
எனினும் தொற்றுச்சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைவதையே இப்போது வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
ஹங்கேரியின் அண்டை நாடுகளான செர்பியா, ரோமானியாவில் புதிதாகத் தொற்றுக்குப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தடுப்பூசி அதிக அளவில் போட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரி முன்னிலையில் உள்ளது.
அந்நாடு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, சீனாவின் சினோஃபார்ம் ஆகிய தடுப்பூசிகளுடன் ஐரோப்பிய தயாரிப்புத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்து மில்லியன் கணக்கானோருக்குப் போட்டுள்ளது.
ஹங்கேரியின் மக்கள் தொகை 10 மில்லியன் பேர். அதில் பாதிப்பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதுவரை 5.66 மில்லியன் பேர் அங்கு, கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் 804,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் நான்காவது அலை நெருக்கடியை எதிர்நோக்கும் ஹங்கேரியில் எவ்விதமான முடக்கநிலையும் அறிவிக்கப்படவில்லை.
கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், பள்ளிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை கட்டடங்களில் மட்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

