தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 90% விழுக்காட்டை நெருங்குகிறது
கோலாலம்பூர்: மலேசியாவில்
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 90% நெருங்கிவிட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் வெளி
நாடுகளுக்குப் பயணம் செல்ல தயாராகி வருகின்றனர்.
கிருமிப் பரவல் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக மலேசியாவில் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக வெளிநாட்டு, உள்நாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரியோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விகிதம் 90 விழுக்காடாக அதிகரிக்கும்போது வெளிநாட்டுப் பயணத்திற்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதத்தில் தளர்த்தப்படக்கூடும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சென்ற மாதம் கூறியிருந்தார்.
மேலும் இம்மாத இறுதி முதல் கொவிட்-19 கிருமித்தொற்றை நிரந்தர நோயாக கையாளுவதற்கு மலேசியா தயாராகி வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மலேசியா நிர்ணயித்திருந்த 90% தடுப்
பூசி இலக்கை அடைவதற்கு 0.9% மட்டுமே குறைவாக இருந்தது. இதில் 89.1% முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பயணத்துறையினர் கூறினர்.
பயணம் செல்ல விரும்புவோர் பயணக் கட்டணத்தைவிட, பயணத் தொகுப்பில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில், குறிப்பாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளானால் ஆகும் மருத்துவ சிகிச்சை எந்தளவுக்கு மலிவாக உள்ளது என்பதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்
படுகிறது.
இந்தோனீசியா, சிங்கப்பூர், தைவான், கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட இடங்களுக்கு மலேசியர்கள் செல்ல விரும்புகிறார்கள்.
கூடுதல் தடுப்பூசிக்கு அனுமதி
ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொமிர்னாட்டி தடுப்பூசியைக் கூடுதல் தடுப்பூசியாக பயன்படுத்த மலேசிய சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
18 வயதுக்கு மேற்பட்ட, இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது ஆறு மாதங்கள் ஆனவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மூத்தோர், சுகாதாரத் துறை ஊழியர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடும் பணி சரவாக்கில் தொடங்கவுள்ளது.
கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல. ஆனால் போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதாக சுகாதார அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.
முந்தைய தடுப்பூசி இயக்கங்களின்போது, பிரிட்டனில் அஸ்ட்ராஸெனிக்கா, சீனாவின் சினோவேக் மற்றும் கேன்சினோ தடுப்பூசிகளை மலேசியா பயன்படுத்தியது.

