செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0a7c42ad-bba3-49df-95ae-728eb8290aed
-

வடகொரியாவில் பட்டினி அபாயம்

சோல்: வடகொரியப் பொருளியல் மிகவும் மோசமடைந்து வருவதால் அங்குள்ள மிகவும் வசதி குறைந்தவர்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர் என்று ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அதனால், வடகொரிய அணுவாயுதத் திட்டத்தின் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனம் அந்நாடு மீது விதித்துள்ள பொருளியல் தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

வடகொரியாவில் மனிதாபிமான நெருக்கடிநிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிறுவர்களும் பெரியவர்களும் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் மனித உரிமைக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி தோமஸ் ஒஜெயா கிண்டானா கூறினார்.

ஏற்கெனவே தன் மீது பொருளியல் தடைகள் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொவிட்-19 சூழலில் வடகொரியா கடும் முடக்கநிலையில் உள்ளது.

ஆப்கானில் பொருளியல் பேரிடரைத் தவிர்க்க ஜி20 தலைவர்கள் உறுதி

உலகின் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான, பொருளியல் பேரிடரைத் தவிர்ப்பதற்காக ஒத்துழைக்க உறுதி தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு பில்லியன் யூரோ (S$1.563 பில்லியன்) உதவித் தொகை அளிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியது. இத்தாலி ஏற்றுநடத்திய மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணையம் வழியாகக் கலந்துகொண்டனர்.

ஆப்கான் மக்களுக்காக ஐக்கிய நாட்டு நிறுவனம் உதவி கேட்டு வந்துள்ளபோதும், பல நாடுகள் குறைவான பொருளுதவியை வழங்கியுள்ளன. உலக நாடுகள் அளிக்கும் உதவித்தொகை, தலிபான் ஆட்சியாளர்களைச் சேரவிடாமல் உதவி அமைப்புகளுக்கும் தன்னிச்சையாக செயல்படும் அமைப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாநாட்டில் கூறினார்.

ரஷ்யாவில் மூக்கில் தெளிக்கும்

தடுப்புமருந்து பரிசோதனை

மாஸ்கோ: ரஷ்யா, கொவிட்-19 கிருமிக்கு எதிராகத் தான் தயாரிக்கும் 'ஸ்புட்னிக் ஐந்து' தடுப்புமருந்தை மூக்கில் தெளிக்கும் ஸ்ப்ரே வடிவில் மாற்றிப் பரிசோதிக்கவுள்ளது. பெரியவர்களிடம் அந்தப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் மருத்துவ பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கிருமிக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் போடப்படுவதைப் போன்று, தடுப்புமருந்து மூக்கில் இரண்டு முறை தெளிக்கப்படும் என்று ஆவணம் கூறியது.

கிருமிப் பரவல் மோசமடைந்துள்ள ரஷ்யாவில் அங்கு நேற்று மரண எண்ணிக்கை ஆக அதிகமாக ஒரே நாளில் 984ஐத் தொட்டது. அங்கு தடுப்பூசி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறினார்.

ரஷ்ய அதிகாரிகள், எட்டு வயது முதல் 12 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஏற்ற, மூக்கில் தெளிக்கும் ஸ்ப்ரே வடிவில் உள்ள தடுப்பு மருந்தைப் பரிசோதித்துள்ளதாக கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தனர்.

நிலம், கப்பல் வழிப் பயணங்களை அனுமதிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான தனது நில எல்லைகளை அமெரிக்கா அடுத்த மாதத் தொடக்கத்தில் திறக்கவுள்ளது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்கள் நிலம் வழியாகவும் படகு வழியாகவும் நாட்டுக்குள் நுழைந்து, உற்றார் உறவினரைப் பார்க்கவும் சுற்றுப்பயணம் செய்யவும் அமெரிக்கா அனுமதிக்கும்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் அலெஹாண்ட்ரோ மேயர்க்காஸ் இதை நேற்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிருமித்ெதாற்று பரவத் தொடங்கியதும் அவசியமற்ற பயணங்களை அமெரிக்கா தடை செய்தது. விமானம் வழிப் பயணிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை அது கடந்த மாதம் அறிவித்தது.

ஐஃபோன் 13 கைபேசி: உற்பத்தியைக் குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐஃபோன் 13 கைபேசியின் உற்பத்தியைக் குறைக்கவுள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் 90 மில்லியன் கைபேசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்ட ஆப்பிள், 80 மில்லியன் கைபேசிகளை உற்பத்தி செய்யும் என்று கூறப்பட்டது. ஆப்பிள் இதை உறுதிசெய்ய மறுத்தது.