அழுகும் ஆப்கான் மாதுளை, தவிக்கும் விவசாயிகள்

அழுகும் ஆப்கான் மாதுளை, தவிக்கும் விவசாயிகள்

2 mins read
08c108e7-68c0-4300-a789-5a05ffbd6a1c
-

ஆப்கானிஸ்தானில் மாதுளை சீசன் தொடங்கியுள்ளது, ஆனால் இந்த ஆண்டு பாகிஸ்தானின் அடிக்கடி மூடப்படும் எல்லையில் தடுக்கப்படும் லாரிகளில் ஆயிரக்கணக்கான டன் மாதுளம் பழங்கள் அழுகிப்போகும் அபாயத்தில் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலையில்லாமல் உள்ளனர். சத்து நிறைந்த மாதுளை மருந்தாகவும் உணவாகவும் மேலும் பல உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் விளையும் மிக முக்கியமான பயிர்களில் மாதுளை ஒன்றாகும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியதிலிருந்து ஆப்கானிஸ்தான் பல நெருக்கடிகளில் மூழ்கியிருப்பதால் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் பழுத்து அழுகிப்போகின்றன.

"இந்த வட்டாரத்தில் மட்டும் 15,000 விவசாயத் துறை ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். வர்த்தகம் முடங்கிவிட்டது. பழங்கள் அழுகுகின்றன," என்று கந்தஹாரில் உள்ள புதிய பழங்கள் சங்கத்தின் தலைவரான ஹாஜி நானி ஆகா ஏஎஃப்பி செய்தியிடம் கூறினார். இஸ்லாமாபாத் தனது அண்டை நாடான ஆப்கானுடன் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் பழ இறக்குமதிக்கு விற்பனை வரியை ரத்துசெய்துள்ளது. ஆனால் சட்டவிரோத குடியேற்றத்துக்குப் பயந்து சாதாரண ஆப்கானிஸ்தானியர்கள் எல்லையைக் கடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் எல்லை வழியாக 40,000 முதல் 50,000 டன் வரை பாகிஸ்தானுக்கும், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்

ஆனால் இதுவரை 4,490 டன் பழங்கள் மட்டுமே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெற்கு நகரமான கந்தஹாரில் உள்ள வர்த்தக சங்கத்தின் திரு அப்துல் பாக்கி பீனா தெரிவித்தார்.

"ஏற்றுமதி எவ்வளவு தாமதமாகிறதோ, அவ்வளவு தரம் குறையும். அவற்றின் விற்பனை மதிப்பு மேலும் சரிந்துவிடும்," என்று அவர் கூறினார்.