தோக்கியோ: ஜப்பானில் அக்டோபர் 31ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதற்கு ஆயத்தமாகும் வகையில் முறையாக நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஜப்பானில் 2020 செப்டம்பர் மாதம் அப்போதையப் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவால் பதவியில் இருந்து விலகினார். அதையடுத்து அவருக்கு நம்பிக்கையானவரான யோஷிஹிடோ சுகா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் தொற்றுக்காலத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்தியதிலும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
மக்கள் மத்தியில் அவர்மீது அதிருப்தி ஏற்பட்டது. அதையடுத்து சுகா, கடந்த மாதம் நடந்த தனது முற்போக்கு ஜனநாயகக் கட்சி நடத்திய தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார்.
இதையடுத்து, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஃபுமியோ கிஷிடா அக் கட்சியின் தலைவரானார்.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கிடைத்த ஆதரவின்படி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கிஷிடா பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பொதுத்தேர்தலை அருகே வைத்துக்கொண்டு நடந்த இந்த பிரதமர் மாற்றம் வரும் தேர்தலில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் முற்போக்கு ஜனநாயகக் கட்சியும் அதன் துணைக் கட்சியான கொமைட்டோ கட்சியும் 300க்கு மேற்பட்ட தொகுதிகளைக் கொண்டிருந்தன.
முந்தைய ஆட்சியில் வலுவிழந்த நிலையில் இருந்த எதிர்க்கட்சிகள், இந்தத் தேர்தலில் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பல தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எனவே, இந்தத் தேர்தலில் கிஷிடாவின் கட்சிக்கு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முதலாளித்துவக் கொள்கையில் கவனம் செலுத்தி அதன் மூலம் ஜப்பான் பொருளியலுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் கிஷிடா.

