இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 19 நாடுகளுக்கு இந்தோனீசியா அனுமதி
டென்பசார் (இந்தோனீசியா): அனைத்துலக சுற்றுப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்தோனீசியாவின் பாலித் தீவு, நேற்று முதல் மீண்டும் வெளிநாட்டினருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பாலிக்கு வரும் வெளிநாட்டினருக்கான கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளும் சிக்கலான விசா முறையும், பொறுப்புறுதி அளிப்பவரைத் தேடுவது போன்ற விதிமுறைகளும் சுற்றுலாப் பயணிகள் அங்கு எளிதில் சென்றுவிட முடியாதநிலையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டினர் பாலி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இப்போது மீண்டும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதால் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கான கடுமையான விதிமுறைகளில் இருந்து சற்று விலக்கு அளித்தால் அதிகமானோர் அங்கு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 19 நாடுகளுக்கு அந்நாடு அனுமதியளித்துள்ளது. பாலித் தீவைப் போல் சுற்றுப் பயணிகள் விரும்பிச் செல்லும் பாத்தாம், பிந்தான் ஆகிய தீவுகளுக்குச் செல்லவும் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டின் அமைச்சர் லுஹுட் பஞ்சைத்தான் கூறினார்.
"பாலித் தீவு மீண்டும் திறந்துவிடப்படுவதால் தீவின் பொருளியல் மீட்படைய வழிவகுக்கும், ஆனால் அதற்குச் சற்றுக் காலம்பிடிக்கும்," என்று நேற்று திரு லுஹுட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தாய்லாந்தின் புக்கெட் தீவு கடந்த ஜூலை மாதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினருக்குத் திறந்துவிடப்பட்டது. அங்கு சுற்றுப்பயணிகள் கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

